சென்னை: மத்தியஅரசுக்கு எதிரான நாடு தழுவிய 2 பொது வேலை நிறுத்தத்தையொட்டி, இன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலகம் முன்பு ஐ.என்.டி.யு.சி. ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி செகிரேட்டரி ஜெனரல் மு.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராள மானோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் “தொழிலாளர் விரோத, விவசாயி விரோத, மக்கள் விரோத மற்றும் தேச விரோத கொள்கைகளுக்கு” எதிராக 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள்  நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு   சி.ஐ.டி.யு. ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி எல்.பி.எஃப் உள்ளிட்ட பல்வேறு தொழிற் சங்கங்கள் இணைந்த இந்திய தொழிற்சங்க கூட்டப்பமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி, இன்று காலை 6 மணி முதல் வேலைநிறுத்தம் தொடங்கி உள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு போக்குவரத்து தொழிற்சங்கமும் கலந்து கொண்டுள்ளதால், தமிழ்நாடு முழுவதும் 90சதவிகிதம் அளவுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு செ‌ன்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சலகம் முன்பு ஐ.என்.டி.யு.சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி செகரட்டரி ஜெனரல் மு.பன்னீர்செல்வம் தலைமை தாக்கினார். மேலும் ஐஎன்டியூசி, முத்த துணை தலைவர் ஆர்.ஆதிகேசவன், பொது செயலாளர்  டி.வி.சேவியர் ம‌ற்று‌ம் பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தொழிற்சங்கத்தினரும் கலந்துகொண்டனர்.

நாளை காலை 5மணிக்கு அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் சிஐடியு நிர்வாகிகள் பி.என்.உன்னி, சு.லெனின் சுந்தர் மற்றும் ஏஐடியுசி ஏ.எஸ்.கண்ணன், பி.மாரியப்பன், எல்.பி.எஃப் கிருஷ்ணமர்த்தி, ராஜ்குமார் தலைமையில் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.