டில்லி:
சென்னை கட்டிட கலைஞர் வடிவமைத்த ‘தேசிய போர் நினைவகத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
தலைநகர் டில்லியில் இந்தியா கேட் அருகில் தேசிய போர் நினைவகம் அமைக்கப்பட்டு வந்தது. இந்த போர் நினைவு சின்னம் வடிவம் குறித்து சர்வதேச அளவில் போட்டிகள் நடத்தப்பட்டது. அந்த போட்டியில், சென்னை சேர்ந்த கட்டிட கலைஞரான யோகேஷ் சந்திரஹாசன் என்பவர் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அவர் வடிவமைத்திருந்த போர் நினைவகம் டில்லியில் அமைக்கப் பட்டது.
இந்த நினைவு சின்னத்தை பிரதமர் மோடி இன்று மாலை தீபம் ஏற்றி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த விழாவில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் முப்படைத் தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சுமார்176 கோடி ரூபாய், 40 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ள தேசிய போர் நினைவகம், ஒரு பெரிய வட்ட வடிவிலான அடித்தளமும், அதன் மையப் பகுதியில் சதுர வடிவில் மேடையும் அமைந்துள்ளது. அதன் நடுவில் அணையா விளக்குடன் கூடிய ஸ்தூபி ஒன்று அமைக்கப்பட் டுள்ளது.
இந்த தேசிய போர் நினைவு சின்னத்தில் ஜோதி ஏற்றி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதைத் தொடர்ந்து பேசிய மோடி, இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க இடத்தில் நம் நாட்டுக்காக உயிரிழந்த வீரர்களுக்காகவும், புல்வாமா வீரர்களுக்காகவும் அஞ்சலி செலுத்துகிறேன்.
கடந்த பல வருடங்களாக தேசிய போர் நினைவகத்துக்கான கோரிக்கை வலுத்து வந்தது. அதுவும் கடந்த 10 ஆண்டுகளில் இந்த நினைவகத்தை ஏற்படுத்த இருமுறை முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு நிறைவேறாத நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு தொடங்கி தற்போதைய அரசு உங்கள் அனைவரின் ஆசியுடனும் தேசிய போர் நினைவகத்தை வெற்றிகரமாக ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.