சென்னை:
மத்தியஅரசு அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுக்க (The National Population Register (NPR) அனுமதி வழங்கிய நிலையில், அதன்மூலம் திரட்டப்படும் தகவல்கள் ஆபத்தானது என்று, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
வரும் 2020ம் ஆண்டு தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பின்போது, நாட்டில் உள்ள அனைவரும் தங்களது தரவுகளை கட்டாயமாக பதிய வேண்டும் என்றும், அதில், குடிமக்களின் பிறந்த தேதி, திருமண நிலை, பிறந்த இடம் மற்றும் தேசியம் (அறிவிக்கப்பட்டபடி) தொடர்பான தரவுகள் கேட்கப்பட்டுஉள்ளது.

மத்தியஅரசின் இந்த திட்டம் ஆபத்தானது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. மத்தியஅரசின் சமீப கால நடவடிக்கை கள், என்சிஆர் திட்டம், குடியுரிமை திருத்த சட்டம் போன்றவை கடுமையாக விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், பல மாநிலங்களில் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற மோடி தலைமையிலான கேபினட் கூட்டத்தில், தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டை நடத்துவதற்காக ரூ.3ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த என்பிஆர் என்பது 2010-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போதுதான் கொண்டு வரப்பட்டது என்றும் பாஜக தெரிவித்தது.
இந்த நிலையில், என்பிஆர் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், 2010-ம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு திரட்டப்பட்ட தகவல்கள் குறித்த விதிமுறைகள் இன்றைய சூழலுக்கு வித்தியாசமானது, ஆபத்தானது என்று சாடியுள்ளார்.
ப.சிதம்பரம் பதிவிட்டுள்ள டிவிட்டில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு பரந்த, அதிகமான தீங்கான நோக்கம் இருக்கிறது. 2010-தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு நேற்று மத்திய அரசு அனுமதியளித்துள்ளது ஆபத்தானது .2010 என்பிஆர் உள்ள விதிமுறைகள் இன்றைய சூழலுக்கு நடைமுறைப்படுத்துவதும் முற்றிலும் வேறுபாடானது.
பாஜகவின் நோக்கங்களுக்கு நற்சான்று அளிக்க வேண்டுமெனில், அரசு எந்தவிதமான நிபந்தனையும் இன்றி 2010 என்பிஆர் முறைக்கும், வடிவமைப்புக்கும் ஆதரவு அளித்து, சர்ச்சைக்குரிய என்ஆர்சியுடன் இணைக்கும் திட்டம் இல்லை என்ற நிலைப்பாடு எடுக்க வேண்டும்.
கடந்த 2010ம் ஆண்டு என்பிஆர் திட்டம் வெளியிடப்பட்ட வீடியோவை பாஜக வெளியிட்டதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். அந்த வீடியோவை தயவு கூர்ந்து கேளுங்கள். நாங்கள் நாட்டில் உள்ள மக்களைத்தான் கணக்கிடுகிறோம், குடியுரிமையை வலியுறுத்தவில்லை.
குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகச் சென்னையில் போராடிய 8 ஆயிரம் பேர் மீதும் மதுரையில், 1,300 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். அலிகாரில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்ற 1,200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையான அமைதியான முறையில் மக்கள் கூடும் உரிமை நீண்ட நாள் வாழட்டும்.
பலாத்காரம், கொலை, அடித்துக் கொல்லுதல் போன்ற வன்முறைச் சம்பவங்களைக் காட்டிலும், மக்கள் அமைதியான முறையில் கூடி போராட்டம் நடத்துவது என்பது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்று போலீஸார் நம்புகிறார்கள்.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.