டெல்லி: ஒடிசாவில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேசிய குடிமக்கள் பதிவுக்கான தரவுகள் சேகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய தேசிய குடிமக்களின் பதிவேட்டுக்கான ஆரம்ப புள்ளியான தேசிய குடிமக்கள் பதிவேடு பணிகள் ஏப்ரல் மாதம் ஒடிசாவில் தொடங்க உள்ளன. அந்த மாதத்தின் 16ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை இந்த பணிகள் முன்னெடுக்கப்படும்.

முன்னதாக இந்த கணக்கெடுப்பை நடத்த ஒடிசாவின் பட்நாயக் அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. அதேபோல கேரளா, மேற்கு வங்க அரசுகளும் கடும் எதிர்ப்பை பதிவு செய்து இருந்தன.

2010ம் ஆண்டு கணக்கெடுப்பு பணியின்படி, தந்தை, தாயார் பெயர், மனைவி அல்லது கணவன் விவரங்கள்,அவர்கள் உயிருடன் உள்ளனரா, இல்லையான என்ற விவரங்கள் தான் கேட்கப்பட்டன. இப்போதைய தரவுகளில் குடிமகனின் பிறந்த தேதி, பிறந்த இடம், பெற்றோர் பிறந்த இடம், நாட்டுக்கு வெளியே பிறந்திருந்தால் எந்த நாடு பற்றிய விவரங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ன.

அது தவிர, இப்போது எடுக்கப்படும் தரவுகளில் பல புதிய ஆவணங்கள் பற்றிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன. அதாவது, மொத்தம் 4 அடையாள சான்றுகள் தேவைப்படுகின்றன. முதலில் ஆதார் எண், மொபைல் எண், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம். இவை தவிர குடிமகனின் தாய்மொழி என்பது பற்றிய விவரம் சேகரிக்கப்படும்.

ஒடிசாவில், கேந்திரபாரா மாவட்டத்தில் பட்டமுண்டாய், கோர்தாவில் புவனேஸ்வர் மற்றும் பலங்கிர் மாவட்டத்தில் புயின்டாலா ஆகிய மூன்று இடங்களில் அதிகாரிகளுக்கு இதுதொடர்பான பயிற்சிகள் ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.