டில்லி:
எம்சிஐ எனப்படும் மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா என்ற நிறுவனத்துக்கு பதிலாக தேசிய மருத்துவ கவுன்சில் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், தேசிய மருத்துவ கவுன்சில் மசோதாவுக்கு பிரதமர் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த புதிய மசோதா அமல்படுத்தப்படும் பட்சத்தில், எம்சிஐ எனப்படும் மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா என்ற அமைப்பு கலைக்கப்பட்டு விடும். அதுபோல, ஹோமியோபதி, ஆயுர்வேதம் படித்தவர்கள், ஒரு ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.
ஆரம்பத்தில், சித்த மருத்துவர்கள் ஆங்கில வைத்தியம் பார்க்கலாம் என்று கூறியிருந்தது. அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து, அதற்கான முடிவை மத்திய அரசு கைவிட்டுள்ளது. அதுபோல பிரிட்ஜ் கோர்ஸ் மற்றும் தகுதி தேர்வு குறித்த அறிவிப்புகளையும் நீக்கி உள்ளது.
ஆங்கில வைத்தியம் பார்க்கும் சித்த மருத்துவர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையுடன் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையில் இந்த சட்டத்திருத்தத்தில் கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் தரமானதாக இருக்கவும், தவறான சிகிச்சை யளிப்போரை கடுமையாக தண்டிக்கவும் மசோதாவில் பல முக்கிய அம்சங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தை முறைப்படுத்தவும் இந்த மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் இந்திய இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
வரும் ஏப்ரல் 2ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் ஐஎம்ஏ எனப்படும் இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பபு தெரிவித்துள்ளது.