டெல்லி: மருத்துவ கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்க விண்ணப்பிக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் வெளியிட்ட தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) மருத்துவ தர நிர்ணயம், மதிப்பீட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2024-25-ம் கல்வியாண்டில் எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்கவும், புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கவும் செப். 19 வரை விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.
இந்த நிலையில், புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகளைத் தொடங்கவும், இடங்களை அதிகரிக்கவும் விண்ணப்பிக்கலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் செயல்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் புதிதாக முதுநிலை மருத்துவப் படிப்புகளைத் தொடங்கவும், இடங்களை அதிகரிக்கவும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், எம்டி, எம்எஸ் போன்ற முதுநிலை மருத்துவப் படிப்புகள் தொடங்கவும், ஏற்கெனவே உள்ள இடங்களை அதிகரிக்கவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தற்போது, கல்லூரியில் உள்ள இளநிலை மருத்துவக் கல்வி இடங்கள் மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களுக்கான அங்கீகாரம் குறித்த தகவல்களை விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருத்தல் அவசியம். புதிய இடங்களை உருவாக்குவதற்கான அத்தியாவசிய சான்று மற்றும் உறுப்பு கல்லூரிக்கான ஒப்புதல் சான்று ஆகியவற்றை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களிடமிருந்து பெற்று, பெயா் மற்றும் வரிசை எண்களைத் தவறின்றி பதிவிட்டு, விண்ணப்பத்தில் இணைக்க வேண்டும். முதுநிலை மருத்துவப் படிப்புக்கான வழிகாட்டு நெறிகளின்படி, விண்ணப்பங்கள் இருத்தல் அவசியம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2024-2025 ஆம் கல்வியாண்டிலிருந்து புதிய முதுகலை மருத்துவப் படிப்புகளைத் தொடங்க அல்லது முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை விரிவுபடுத்துவதற்காக அமைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளின் விரிவான பட்டியலை தேசிய மருத்துவ ஆணையம் (NMC) சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
நுண்ணுயிரியலில் MD, உடற்கூறியல் MD/MS, மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்தில் MS, மருந்தியலில் MD, மற்றும் தோல் வெனராலஜியில் MD போன்ற துறைகளில் முதுகலை மருத்துவப் படிப்புகளைத் தொடங்கும் தோராயமாக 172 கல்லூரிகளை இந்தத் தொகுப்பு உள்ளடக்கியது. கூடுதலாக, வரவிருக்கும் கல்வி அமர்வுக்கு முதுகலைப் பட்டதாரி இடங்களை அதிகப்படுத்த விரும்பும் 37 கல்லூரிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.