தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் நடிகர் விவேக். கடந்த ஏப்ரல் 16-ம் தேதி மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விவேக் எப்படியாவது மீண்டு வந்துவிடுவார் என திரையுலகினரும், ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், ஏப்ரல் 17-ம் தேதி காலை அவரது உயிர் பிரிந்தது.
கொரோனாவை தடுக்கும் ஒரே பேராயுதமான தடுப்பூசி குறித்து மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த நடிகர் விவேக், மரணம் அடைவதற்கு இரண்டு நாட்கள் முன்புதான் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டு அந்த புகைப்படத்தையும் வெளியிட்டு மக்களிடம் விழுப்புணர்வு ஏற்படுத்தினார். தடுப்பூசி போட்டதால்தான் விவேக் மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார் என்று செய்திகள் வேகமாக பரவியது.
தடுப்பூசியால் தான் விவேக் மரணமடைந்ததாக கூறி விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். தற்போது இந்த புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
இந்த புகார் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், சமூக ஆர்வலரின் புகார் மனு மீது 8 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி, அது குறித்த அறிக்கையை புகார்தாரருக்கு தெரிவிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் கூறி உள்ளது.