தூத்துக்குடி:

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்திய தேசிய மனித உரிமை ஆணையம். தமிழக அரசு எடுத்த நடவடிக்கையே திருப்திகரமானதாக இருப்பதால் அந்த வழக்கை முடித்து வைப்பதாக மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வந்த தூத்துக்கு ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22ந்தேதி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் துப்பாக்கிச் சூடு அடுத்த சில தினங்களுக்கு தூத்துக்குடியில் பதட்டமான சூழலை உருவாக்கியது. இந்த சம்பவம் இந்தியா முழுவதும் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தி வந்தது.  இதற்காக தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் டெல்லியில் இருந்து தூத்துக்குடி வந்து விசாரணை நடத்தினர். தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்கள் மற்றும் கலவரத்தில் சேதமான வாகனங்களை அவர்கள் பார்வையிட்டனர்.

துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினரிடமும், காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பலியானவர்கள் குடும்பத்தின ருக்கு சம்மன் அனுப்பி அவர்களை விசாரணை அலுவலகத்திற்கு வரவழைத்து விபரங்களை சேகரித்தனர். மேலும் விசாரணை அலுவலகத்திற்கு வராதவர்களிடம் நேரடியாக வீட்டிற்கு சென்று விபரங்கள் கேட்டனர்.அப்போது துப்பாக்கி சூடு நடந்த 22, 23-ந்தேதிகளில் பணியில் இருந்த டி.எஸ்.பி. களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஒரே நாளில் 9 டி.எஸ்.பி.க்கள் தங்களது வாக்குமூலங்களை எழுத்து பூர்வமாக அளித்தனர். மேலும் கலெக்டர் அலுவலக ஊழியர்களிடமும் விசாரணை மேற்கொண்டார்கள்.

இன்று காலை 6-வது நாளாக விசாரணை நடைபெற்றது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து அரசு மருத்துவமனை ஊழியர்கள், டாக்டர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

6 நாட்கள் நடைபெற்ற விசாரணையில் மனித உரிமை ஆணையத்திடம் சுமார் 80-க்கும் மேற்பட்டோர் எழுத்து பூர்வ வாக்குமூலம் அளித்துள்ளனர். 330-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் விசாரணை முடிவடைந்தது.

விசாரணை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும், விசாரணை விபரங்களும் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவடைந்ததையடுத்து தேசிய மனித உரிமை ஆணையக் குழுவினர் இன்று டெல்லி புறப்பட்டு சென்றனர். துப்பாக்கி சூடு சம்பந்தமான முழு விசாரணை அறிக்கையை விரைவில் அவர்கள் மனித உரிமை ஆணையத்திடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் மனித உரிமை மீறல்கள் இருப்பதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டிருக்கும் பட்சத்தில் அதற்கான கூடுதல் நடவடிக்கைகளை மனித உரிமை ஆணையம் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என ராஜராஜன் என்பவர் மனு தாக்கல் செய்தார். ஆனால் அதை ஏற்க மறுத்த ஆணையம்,  தமிழக அரசு எடுத்த நடவடிக்கையே திருப்திகரமானதாக இருப்பதால் அந்த வழக்கை முடித்து வைப்பதாக மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.