சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு முதன்முறையாக கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் வரும் 15ந்தேதி கொடியேற்றுகிறார். அதற்கான தேசியக்கொடி தயார் நிலையில் உள்ளது.
நாட்டின் 75வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்டு 15ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சென்னை கோட்டை கொத்தளத்தில், முதல்வர் தேசியக்கொடி ஏற்றுவது வழக்கம். இந்த ஆண்டு, முதன்முறையாக முதல்வராக பதவி ஏற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடியேற்ற உள்ளார். கோட்டை கொத்தளத்தில் கொடி யேற்றுவதற்கான நடவடிக்கைகள் தயாராகி வருகின்றனர்.
கோட்டை கொத்தளத்தில் உள்ள கொடிக்கம்பம் 138 அடி உயரமானது. இந்த கொடிக்கம்பத்தில் முதல்வர் ஸ்டாலின் ஏற்றும் வகையில், மகாராஷ்டிராவில் தயாரிக்கப்பட்ட, ஐ.எஸ்.ஐ., சான்று பெற்ற தேசியக்கொடி வாங்கப்பட்டுஉள்ளது. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், நிறுவனங்களில், காதியில் தயாரிக்கப்பட்ட, ஐ.எஸ்.ஐ., சான்று பெற்ற தேசியக் கொடிகளையே ஏற்ற வேண்டும் என்பது மத்தியஅரசின் உத்தரவு. அதையடுத்து, கோட்டை கொத்தளத்தில் ஏற்றுவதற்காக, மஹாராஷ்டிரா மாநிலம், நான்டெக், மரத்துவாடாவில், மத்திய அரசின் காதி நிறுவனத்தில் தயாரிக்கப் படும் தேசிய கொடியை தமிழகஅரசு வாங்கி உள்ளது. இந்த தேசியக்கொடி , சென்னை காதி கிராமோத்யோக் பவனுக்கு வரவழைக்கப்பட்டு உள்ளது.
நாட்டிலேயே மிக உயரத்தில் பறக்கும் தேசியக்கொடி பஞ்சாப் மாநிலம், வாகா எல்லையில், 360 அடி உயரத்தில் பறப்பது குறிப்பிடத்தக்கது.