சென்னை: தேசியக்கொடி அவமதிப்பு வழக்கில், தான் கைது செய்யப்படலாம் என அஞ்சிய நடிகர் எஸ்வி சேகர், சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்த நிலையில், இன்று திடீரென மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் சரணடைந்தார். ஆனால், காவல் துறையின் விசாரணைக்காக அவர் ஆஜராகி இருப்பதாக கூறப்படுகிறது.
தேசிய கொடியைஅவமதித்ததாக தனியார் ஒருவர் நடிகர் எஸ்.வி.சேகர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் மனு அனுப்பி இருந்தார். இந்த மனு மீது
சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக காவல் துறையினர் தன்னைக் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்து இருந்தார்.
இந்த வழக்கு இன்னும் விசாரணைக்கு வராத நிலையில், இன்று முற்பகல் திடீரென சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் எஸ்.வி.சேகர் ஆஜர் ஆனார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
காவல்துறையினர் அவரை கைது செய்வதை தடுக்கவே, அவர் சரண் அடைந்து, விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்து வருவதாக கூறப்படுகிறது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.