ஐதராபாத்: எதிர்காலத்தில் இந்திய அணியின் பந்துவீச்சு பட்டாளத்தில் ஒரு முக்கிய நபராக இருப்பார் டி.நடராஜன் என்று கணித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் விவிஎஸ் லஷ்மண்.

தற்போது ஐபிஎல் ஐதராபாத் அணியின் பயிற்சியாளராக உள்ளார் லஷ்மண். அதே அணியில் இடம்பெற்றவர்தான் டி.நடராஜன். இவர், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்காக, இந்திய அணியில் தேர்வாகியுள்ளார்.

இந்நிலையில் இவர் குறித்து பேசியுள்ள லஷ்மண், “இந்திய அணியில் நடராஜன் தேர்வானதில் எனக்குப் பெரிய ஆச்சர்யமில்லை. ஏனெனில், அவர் ஒரு இடதுகை பந்துவீச்சாளர். முக்கிய சக்தியாக இருப்பார் என்பதால்தான், தேர்வுக்குழுவினர் அணியில் எடுத்துள்ளனர் என்று நினைக்கிறேன்.

ஐபிஎல் என்பதும் சிறந்த வீரர்கள் ஆடும் சர்வதேசத் தொடரைப் போலத்தான். அதனால் ஐபிஎல் தொடரில் அவர் ஆட்டத்தைப் பார்த்த பிறகு கண்டிப்பாக அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெறுவார் என்று உறுதியுடன் கூறுகிறேன். களத்தை ஒழுங்காக அறிந்து, சரியான விதத்தில் பந்து வீசி சிறப்பாகச் செயல்படுவார்.

புவனேஷ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டதால் கலீல் அகமதுக்குப் பதிலாக நடராஜனை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். அணியில் தவிர்க்க முடியாதவராக மாறிவிட்டார் அவர். நடராஜன் யார்க்கருக்குப் பெயர் பெற்றுவிட்டார். அதேசமயம், அவர் பலவிதமான நுணுக்கங்களைத் தெரிந்தவர். அவற்றை ஐபிஎல் தொடரில் பயன்படுத்தவில்லை. புதிய பந்தில் விக்கெட் எடுக்கும் திறன் பெற்றவர் அவர்.

யார்க்கர்கள் வீசுவதுதான் மிகக் கடினம். ஆனால், அதைச் சரியாக வீசும் தன்னம்பிக்கை நடராஜனுக்கு இருக்கிறது. இதில் டி வில்லியர்ஸை அவர் வீழ்த்திய யார்க்கர்தான் மிகச் சிறந்தது. இது அவரின் தன்னம்பிக்கைக்கு சான்று” என்றுள்ளார் லஷ்மண்.

 

[youtube-feed feed=1]