சென்னை:

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு கர்நாடகா சிறையில் உள்ள சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருப்பதால், சசிகலா பரோலில் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இன்று பிற்பகல் அல்லது நாளை அவர் பரோலில் வெளியே வர இருப்பதாக அவரது வழக்கறிஞர் வட்டார தகவல்கள் கூறுகின்றன.

நெஞ்சுவலி காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவருக்கு வெண்டிலேட்டர் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை நடராஜனை காண குளோபல் மருத்துவமனை சென்ற டிடிவி தினகரனும், நடராஜனை காண சசிகலா பரோலில் வருவார் என்றும், அதற்கான முயற்சிகளில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டு உள்ளனர் என்றும் உறுதிப்படுத்தினார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு செம்டம்பர் மாதத்தில்,  சிறுநீரகம், கல்லீரல் நோய் காரணமாக பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல்  தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்ற நடராஜன், உறுப்பு மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டு பல உறுப்புகள் மாற்றப்பட்டதை  தொடர்ந்து உடல்நிலை தேறி வந்தார்.

அப்போது, மருத்துவமனையில் இருந்த நடராஜனை காண சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டிருந்தது. அதன்பிறகு, தற்போது மீண்டும் பரோலுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர்  6-ம் தேதி  சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த சசிகலா, சென்னை தியாகராய நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் வீட்டில் தங்கியப்படி, தனது கணவர் நடராஜனை மருத்துவமனை யில் அவ்வப்போது  சந்தித்து நலம் விசாரித்து வந்தார். அதைத்தொடர்ந்து, அக்டோபர்11 ந்தேதி பரோல் முடிவடைநது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்தியச் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.