2018-ம் ஆண்டு நடந்த டப்பிங் கலைஞர்கள் சங்கத்து தேர்தலில் வெற்றி பெற்று தலைவராக பணி புரிந்து வந்தவர் ராதாரவி .

அவருடைய பதவிக் காலம் பிப்ரவரி 15-ம் தேதி முடிவடைய உள்ளதால், மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ளது.

இம்முறையும் தலைவர் பதவிக்கு ராதாரவி போட்டியிடுகிறார். ஆனால் அவரை எதிர்த்து சின்மயி களமிறங்கியுள்ளார்.

நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்துவிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்த சின்மயி.; “2018-ம் ஆண்டு எந்தவித விளக்கமும் இல்லாமல் என்னை டப்பிங் யூனியனிலிருந்து நீக்கினார்கள். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். உறுப்பினராக இருப்பதற்கு அத்தனை உரிமைகளும் எனக்கு இருப்பதாகத் தீர்ப்பு வழங்கினார்கள்.

சில நாட்களுக்கு முன்பு டப்பிங் யூனியன் தேர்தலுக்கான வாக்காளர்கள் பட்டியலில் எனது பெயரை நீக்கியிருந்தார்கள். அதுவே ஒரு நீதிமன்ற அவமதிப்பு. இதைத் தொடர்ந்து நீதிபதியிடம் பேசி இன்றைக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்தேன்.

டப்பிங் யூனியனுடைய பணத்தை வைத்தே வழக்குத் தொடர்கிறார்கள். இங்கு நடப்பது தவறுதான்” என்று பேசினார் சின்மயி.

இந்நிலையில் நடிகர் நாசர் சின்மயி போட்டியிடும் ராமராஜ்யம் அணியில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதற்காக நேற்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நடிகர் சங்கத் தேர்தலில் ராதாரவியை எதிர்த்து போட்டியிட்ட நாசர் தற்போது டப்பிங் யூனியனிலும் ராதாரவிக்கு எதிரணியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.