9 மாதங்கள் கழித்து பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோருக்கு நாசா கூடுதலாக தலா ரூ. 1 லட்சம் மட்டுமே சம்பளமாக வழங்கும் என்று கூறப்படுகிறது.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் மார்ச் 19ம் தேதி பூமி திரும்பவுள்ளனர்.
2024 ஜூன் 5ம் தேதி 8 நாள் பயணமாக விண்வெளிக்கு பறந்த அவர்களது போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அடுத்து அவர்கள் இருவரும் விண்வெளி ஆய்வு மையத்திலேயே தங்க நேர்ந்தது.
அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்பைஸ்எக்ஸ்-ன் க்ரூ-9 விண்கலம் ISS-வுடன் இணைக்கப்பட்ட நிலையில் மார்ச் மாதம் இந்த க்ரூ-9 விண்கலத்தின் பணி நிறைவடையும் போது சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோருக்காக காலியாக வைக்கப்பட்டுள்ள இருக்கைகளில் அவர்கள் திரும்புவார்கள் என்று கூறப்பட்டது.
தற்போது 4 விண்வெளி வீரர்களுடன் ஸ்பைஸ்எக்ஸ்-ன் க்ரூ-10 விண்கலம் இரு தினங்களுக்கு முன் ISS சென்றடைந்துள்ள நிலையில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் மேற்கொண்டு வந்த பணிகள் இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வரும் மார்ச் 19ம் தேதி அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் சுமார் 287 நாட்கள் விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவருக்கும் தலா 1 லட்ச ரூபாய் மட்டுமே கூடுதல் சம்பளம் கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
விண்வெளி வீரர் சம்பள விவரம் அறிக்கைகளின்படி, GS-15 பெடரல் ஊழியர்களாக, வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆண்டு சம்பளம் $125,133 முதல் $162,672 வரை (தோராயமாக ரூ.1.08 கோடி முதல் ரூ.1.41 கோடி வரை) சம்பளமாகப் பெறுகிறார்கள்.
இந்த இரண்டு விண்வெளி வீரர்களுக்கும் அவர்களின் நீட்டிக்கப்பட்ட 9 மாத பயணத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வருமானம் சுமார் $93,850 முதல் $122,004 வரை (சுமார் ரூ.81 லட்சம் முதல் ரூ.1.05 கோடி வரை) இருக்கும்.
இது மலைப்பை ஏற்படுத்தினாலும், நாசா தனது வீரர்களுக்கு ஓவர் டைம் ஊக்கத்தொகை வழங்குவதில்லை. மாறாக, தற்செயலான நிகழ்வுகளுக்கு ஒரு நாளைக்கு வெறும் $4 (ரூ. 347) மட்டுமே உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தற்செயல் நிகழ்வாக கருதப்படுவதை அடுத்து இவர்கள் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த 287 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 347 வீதம் மொத்தம் சுமார் ரூ. 1 லட்சம் மட்டுமே ஒவ்வொருக்கும் கூடுதலாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும், விண்வெளியில் இருந்து பூமி திரும்பியதும் கிட்டத்தட்ட ஒரு வருட மைக்ரோ கிராவிட்டியை ஈடுகட்டத் தேவையான ஆரோகியமான உணவுக்கு கூட இந்த உதவித்தொகை உதவாது என்பது குறிப்பிடத்தக்கது.