ஸ்ரீஹரிகோட்டா:
விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் இன்னும் இரண்டு நாளில் முடிவடைய உள்ள நிலையில், அதனை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அமெரிக்க விண்வெளி நிலையமான நாசாவும் கைவிரித்து விட்டது. இதன் காரணமாக சந்திரயான்-2 திட்டத்தின் முக்கிய பணி தோல்வியில் முடிவடைந்து உள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக முதன்முதலாக இந்தியாதான், சந்திரயான்-2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணுக்கு சென்ற சந்திரயான்2, புவி வட்டப் பாதை யிலிருந்து விலகி, நிலவின் சுற்று வட்டப்பாதைக்கு சென்றடைந்தது. அதைத்தொடர்ந்து சந்திரயான்2 விண்கலத்திலிருந்து, விக்ரம் லேண்டர் பகுதி செப்டம்பர் 2-ம் தேதி வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணி படிப்படியாக நடைபெற்று வந்தது. இறுதியாக கடந்த (செப்டம்பர்) 7ந்தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறக்குவதற்கான கடைசிகட்டப் பணிகள் நடைபெற்றன. அப்போது, திடீரென, நிலவின் பரப்பிலிருந்து 2.1 கி.மீ. தொலைவில் லேண்டர் வந்தபோது, அதற்கும் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இது விஞ்ஞானிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதனடன் தொடர்பை ஏற்படுத்தும் பணி நடைபெற்று வந்தது. விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் 14 நாட்கள் மட்டுமே என்பதால், இஸ்ரோவுடன் இணைந்து லேண்டரை தொடர்பு கொள்ள நாசாவும் முயற்சி செய்து வந்தது.
அமெரிக்கா கடந்த 2009ம் ஆண்டு நிலவுக்கு அனுப்பிய ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சி மேற்கொண்டது. ஆனால், அந்த முயற்சி தோல்வி அடைந்துள்ளதாக நாசா தெரிவித்து உள்ளது. நிலவில் இருக்கும் சூழ்நிலை காரணமாக நாசாவின் ஆர்பிட்டர், லேண்டர் விக்ரமை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தெரிவித்து உள்ளது.
இதற்கிடையில் விக்ரம் லேண்டரின் ஆயுட்காலம் வரும் சனிக்கிழமையுடன் முடிவடைய உள்ளதால், அதை தொடர்புகொள்ளும் பணியில், இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள்.
இதற்கிடையில், இஸ்ரோ, தங்களுக்கு ஒத்துழைத்த அளித்த அனைவருக்கும் நன்றி என்று தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளது.