ஸ்ரீஹரிகோட்டா
நிலவில் இறங்கி உள்ள விக்ரம் லாண்டருக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் நாசா சிக்னல் அனுப்பி வருகிறது.
இந்தியாவின் விண்கலமான சந்திரயான் 2 வில் இருந்து பிரிந்த விக்ரம் லாண்டர் நிலவில் தரை இறங்கும் போது 2.1 கிமீ தொலைவில் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த லாண்டருடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து முயற்சி செய்கின்றனர். ஆயினும் இதுவரை லாண்டரில் இருந்து எவ்வித பதிலும் கிடைக்காமல் உள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாசா தனது லேசர் ரிப்ளெக்டரை விக்ரம் லாண்டர் மூலம் நிலவுக்கு அனுப்பி உள்ளது. அது நிலவுக்கும் பூமிக்கும் இடையிலான சரியான தூரத்தை கணிக்க இருந்தது. தற்போது இந்த ரிப்ளக்டரும் இயங்காத நிலையில் உள்ளதால் நாசா கவலை அடைந்துள்ளது.
இந்நிலையில் நாசா விக்ரம் லாண்டரில் இருந்து மீண்டும் தொடர்பை உண்டாக்க இஸ்ரோவுக்கு உதவ முன்வந்துள்ளது. இஸ்ரோவின் அனுமதிக்குப் பிறகு நாசா தொடர்ந்து விக்ரம் லாண்டருக்கு சிக்னல்கள் அனுபி வருகின்றன. விக்ரம் லாண்டரின் ஆயுட்காலம் 14 நாட்கள் மட்டுமே ஆகும்.
நாசாவின் மூன்று ஆய்வு நிலையங்கள், கலிபோர்னியா, ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ளன. இந்த மூன்று நிலையத்திலும் விண்ணில் ஆழமாக ஊடுருவி சிக்னல் அனுப்பும் சக்தி கொண்ட ஆண்டெனாக்கள் பொருத்தப்பட்டன. இந்த நிலையங்கள் மூலமும் நாசா சிக்னல்கள் அனுப்பி வருகின்றன.