சிம்பு நடிப்பில் உருவான பத்து தல திரைப்படம் இன்று வெளியானது.
இதனையடுத்து இன்று அதிகாலை முதல் அவரது ரசிகர்கள் சிறப்பு காட்சியைக் காண திரையரங்குகளில் குவிந்தனர்.
அந்த வகையில் எம்.ஜி.ஆர். முதல் ரஜினிகாந்த் வரை அனைவரையும் உச்சானிக் கொம்பில் ஏற்றிய ரசிகர்களான நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த சில பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் ரோகினி திரையரங்கிற்கு வந்துள்ளனர்.
படம் பார்ப்பதற்கான டிக்கெட்டை கையில் வைத்திருந்தபோதும் அவர்களை உள்ளே படம் பார்க்க அங்கிருந்த டிக்கெட் பரிசோதகர் அனுமதி மறுத்தார்.
இதனை அங்கிருந்த ஒருவர் தட்டிக் கேட்டதை அடுத்து மற்றொருவர் இதனை தனது செல் போனில் படம்பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
டிக்கெட் எடுத்தும் நரிக்குறவர் சமூகம் என்பதற்காக தீண்டாமையை செய்திருக்கிறது ரோகிணி திரையரங்கம்!
Sc/St act படி அரசு கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.@mkstalin @Kayalvizhi_N @Udhaystalin @thirumaofficialpic.twitter.com/d7ycUU0Jq1
— நிதன் சிற்றரசு (@srinileaks) March 30, 2023
நரிக்குறவர் சமுதாய மக்களை உள்ளே அனுமதிக்க மறுத்ததாகக் கூறி ரோகினி திரையரங்கு மீது குற்றச்சாட்டு எழுந்ததுடன் தீண்டாமை வன்கொடுமை சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக வலைதளத்தில் வைரலானது.
இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள ரோகினி திரையரங்க நிர்வாகம், டிக்கெட் வாங்கிய அந்த குறிப்பிட்ட பெண்கள் யு / ஏ சான்று வழங்கப்பட்டுள்ள பத்து தல படத்திற்கு 2 முதல் 10 வயதே ஆன குழந்தைகளுடன் வந்ததால் வாயிலில் இன்ற பரிசோதகர் தடுத்து நிறுத்தியதாகவும் பின்னர் அவர்கள் படம்பார்க்க அனுமதிக்கப்பட்டதாகவும் கூறி அவர்கள் படம் பார்க்கும் வீடியோ-வை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.
— Rohini SilverScreens (@RohiniSilverScr) March 30, 2023
இருந்தபோதும் இவர்கள் அதே காட்சிக்கு அனுமதிக்கப்பட்டனரா அல்லது சமூக வலைதளத்தில் வைரலானதை அடுத்து வேறு காட்சிக்கு அனுமதிக்கப்பட்டனரா என்பது குறித்தும் பல ஆண்டு பழமையான திரையரங்கில் யு / ஏ சான்று படத்திற்கு அனுமதிக்கப்படும் நபர்களின் வயதுவரம்பு குறித்து எதுவும் தெரியாதா என்றும் கேள்வியெழுப்பி வருவதுடன் இதுகுறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கூறிவருகின்றனர்.