சென்னை: தமிழகத்தில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர் மற்றும் மலையாளி கவுண்டர் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்காக  பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதவது:
“தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர் மற்றும் மலையாளி கவுண்டர் சமுதாயத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது என்ற செய்தி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில் லோக்கூர் கமிட்டி மற்றும் நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழு ஆகியவை நரிக்குறவன் மற்றும் குருவிக்காரன் இனத்தவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை சில ஆண்டுகளுக்கு முன்னேரே அளித்திருந்தது. மத்திய தலைமைப் பதிவாளரும் இந்த கருத்துருவுக்கு ஒப்புதல் அளித்ததன் அடிப்படையில் இதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என 2012 ஆம் ஆண்டு ஜுலை மாதம் எனது தலைமையிலான அப்போதைய தமிழ்நாடு அரசு, மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியது.
மாநில அரசின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசின் பழங்குடியின அமைச்சகம் நரிக்குறவன் மற்றும் குருவிக்காரன் இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்காக, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை பெறுவதற்கான குறிப்பு ஒன்றை தயாரிப்பதாக 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தெரிவித்தது. மத்திய பழங்குடியினர் அமைச்சகம் 2013 ஆம் ஆண்டு ஜுலை மாதம் கேட்டுக் கொண்டதற்கிணங்க நரிக்குறவன் மற்றும் குருவிக்காரன் என்பது இந்தி மொழியில் எவ்வாறு எழுதப்பட வேண்டும் என்பது பற்றியும் மத்திய அரசுக்கு எனது தலைமையிலான அரசால் தெரிவிக்கப்பட்டது.
 
 
download
நாடோடிகளாக வாழும் நரிக்குறவர்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் எனவும், அவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்கள் எனவும், அவ்வாறு சேர்க்கப்படுவதன் மூலம் அவர்களுக்கு உரிய அரசியல் சட்டப் பாதுகாப்பும், நல்வாழ்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டால் இந்த இன மக்கள் ஏனைய சமுதாயத்தினருக்கு இணையாக, கண்ணியமாக வாழ வழிவகை ஏற்படும் என நான் அப்போதைய பிரதமருக்கு 26.8.2013 அன்று ஒரு கடிதம் எழுதினேன். பிரதமர் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடுமாறும், அரசமைப்பு சட்டத்தில் திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறும் நான் அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டேன்.
அதன் பின்னர், எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு இது தொடர்பாக தொடர்ந்து மத்திய அரசை வற்புறுத்தி வந்தது. இன்று (25.5.2016) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நரிக்குறவன், குருவிக்காரன் மற்றும் மலையாளி கவுண்டர் இன மக்களை பழங்குடியினர் இனப் பட்டியலில் சேர்ப்பதற்கான ஒப்புதலை மத்திய அரசு அளித்துள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவதற்கான அரசமைப்பு சட்ட திருத்தங்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வந்து அது நிறைவேற்றப்பட்ட பின் நரிக்குறவன், குருவிக்காரன் மற்றும் மலையாளி கவுண்டர் இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, இந்த இன மக்களும் நற்பயன்களைப் பெற்று கண்ணியமாக வாழ வழிவகை ஏற்படும். எனது தலைமையிலான தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக நரிக்குறவர், குருவிக்காரர் இன மக்கள் வாழ்வு வளம் பெறும்.
கடந்த பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மாநில அரசின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியமைக்கு பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” –  இவ்வாறு அந்த கடிதத்தில் ஜெயலலிதா கூறியுள்ளார்.