புதுச்சேரி: “புதுவை மாநிலத்தில் கடந்த ஆட்சியில் பல முறைகேடுகள் வெளிவருகின்றன” என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த ஆட்சியில் முதல்வராக பொறுப்பு வித்த என்.ரங்கசாமி உட்பட அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு தொடரப்படும் என்கிற பரபரப்பான பேச்சு எழுந்துள்ளது.
ராகுல் காந்தி பிறந்த நாள் நேற்று புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. மாநிலத் தலைவர் ஏ.நமச்சிவாயம் தலைமை வகித்தார். முதல்வர் நாராயணசாமி 46 கிலோ கேக்கை வெட்டி தொண்டர்களுக்கு வழங்கினார்.
பிறகு அவர் பேசும்போது, “பிரதமர் மோடிக்கு சிம்மசொப்பனமாக விளங்குகிறார் ராகுல் காந்தி. அவரை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். வருகிற 2019ம் ஆண்டில் அவர் பிரதமராக நாம் பாடுபட வேண்டும்.
அமைச்சர்கள் தங்கள் துறைகளில் சுதந்திரமாகவும் சிறப்பாகவும் பணியாற்றாத பட்சத்தில்தான் நான் தலையிடுவேன்.
அண்டை மாநிலத்தோடும் சுமுக உறவு வைக்க வேண்டும். தமிழகத்தில் ரமலான் நோன்பிருக்கும் இஸ்லாமியர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படுவதுபோல புதுவையிலும் வருகிற 6ம் தேதி வரை வழங்கப்படும் என காரைக்காலில் அமைச்சர் ஷாஜகான் அறிவித்துள்ளார். அந்தத் திட்டம் உடனடியாக அமல்படுத்தப்படும்” என்ற நாராயணசாமி, “புதுவையில் கடந்த ஆட்சியாளர்களின் கோப்புகளைப் பார்த்தால் பல முறைகேடுகள் வெளிவருகின்றன. 10 ஆண்டுகளாக காரைக்கால் பக்கம் அவர்கள் செல்லவே இல்லை. காரைக்காலில் பல்வேறு துறைகளில் குளறுபடிகள் நடந்துள்ளன. அதனை எல்லாம் சரிசெய்ய வேண்டும்” பேசினார்.
இதையடுத்து கடந்த ஆட்சியாளர்கள் மீது வழக்குகள் பாயக்கூடும் என்ற பரபரப்பான பேச்சு அங்கு எழுந்துள்ளது.