புதுவை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாராயணசாமி 15 நாட்களை கடப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்துடன் சேர்ந்து கடந்த 16ம் தேதி புதுவை யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்ற தேர்தல் நடந்தது. மொத்தம் 30 தொகுதிகள் உள்ள புதுவையில் காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி 17 இடங்களில் வென்று அறுதிப்பெரும்பான்மை பெற்றது.
இதில் காங்கிரஸ் 15 இடங்களையும், தி.முக. 2 இடங்களையும் பெற்றன. இதையடுத்து காங்கிரஸ் சார்பில் முதல்வரை தேர்ந்தெடுக்கும் பணி துவங்கியது. அக் கட்சி சார்பில் முன்னாள் முதல்வர் வைத்தியலிங்கம், முன்னாள் மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் நமசிவாயம் ஆகியோர் முதல்வர் பதவியை பெற முயற்சி செய்தனர். இவர்களும், இவர்கள் சார்பானவர்களும் டில்லிக்கு சென்று காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காங்கிரஸ் மேலிட பார்வையாளர்கள் முகுல் வாஸ்னிக், ஷீலா தீட்சித் ஆகியர் முன்னிலையில் புதுவை காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டலில் நடந்தது. கூட்ட முடிவில் முதல்வராக நாராயணசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. முதல்வர் பதவிக்கு முயற்சி செய்த வைத்தியலிங்கம், நமசிவாயம் ஆகியோர் நாராயணசாமி பெயரை முன்மொழிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த ஒருவாரமாக நீடித்து வந்த முதல்வர் யார் என்ற குழப்பம் தீர்ந்ததாக சொல்லப்பட்டது.
ஆனால் முதல்வராக நாராயணசாமி 15 நாட்களாவது நீடிப்பாரா என்கிற கேள்வி புதவை அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
காரணம், எம்.எல். ஏக்கள் கூட்டத்தில் நாராயணசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பிறகு, அந்த அறையில் இருந்து சோகமான முகத்துடன் நமசிவாயம் வெளியேறினார். அவரது தொண்டர்கள் அவரை முற்றுகையிட்டு முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்தது தொடர்பாக கேள்விகளை எழுப்பினர்.
அதற்கு நமசிவாயம் , “கட்சிக்கட்டுப்பாட்டை மீறக்கூடாது. அனைவரும் புறப்படுங்கள்” என்று கூறிவிட்டு கிளம்பினார்.
ஆனால், நாராயணசாமிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய நமசிவாயம் ஆதரவாளர்கள், கிழக்கு கடற்கரை சாலையில் ஹோட்டலுக்கு வெளியே மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இதில் மூவர் கடுமையாக காயமடைந்தனர் உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ஆகவே நாராணயனசாமி பெயரை முதல்வர் பதவிக்கு நமசியவாயம், முன்மொழிந்ததாக சொல்லப்பட்டாலும் அவருக்கு இதில் உடன்பாடில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அவரது ஆதரவாளர்கள், “நாராயணசாமிக்கு புதுவையில் தொண்டர்களிடமோ, மக்களிடமோ செல்வாக்கு கிடையாது. இந்த சட்டமன்ற தேர்தலிலும் அவர் போட்டியிடவில்லை. ஆகவே அவரை முதல்வராக காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்ல.. புதுவை மக்களும் ஏற்க மாட்டார்கள்” என்கிறார்கள்.
மேலும் அவர்கள், “முன்னாள் முதல்வர் என். ரங்கசாமிக்கு நெருங்கிய உறவினர் நமசிவாயம். ஆனால் ரங்கசாமி கட்சியை உடைத்துக்கொண்டு வெளியேறியபோது, கட்சி விசுவாசத்துடன் காங்கிரஸிலேயே தொடர்ந்தவர் நமசிவாயம். ஆகவே அவர்தான் முதல்வர் பதவிக்கு தகுதியானவர்” என்றார்கள்.
இந்த நிலையில் நாராயணசாமிக்கு எதிரான சதிராட்டங்கள் புதுவையில் துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வரும் தகவல்கள்:
“நமசிவாயம், பின்னால் ஆறு எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். ஆகவே நமசிவாயத்துடன் சேர்த்து ஏழு எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள். இவர்களுடன், என். ஆர். காங்கிரஸ் எம்.எல்ஏக்கள் எட்டு பேரும் சேர்ந்தால் 15 எம்.எல்.ஏக்கள் வந்துவிடுவார்கள். கூடுதலாக ஒரு இடம் கிடைத்தாலே பெரும்பான்மை பெற்றுவிடலாம்.
ஆகவே என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து நமசிவாயம் ஆட்சி அமைக்கும்படியாக ஒரு பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ரங்கசாமியும், நமசிவாயமும் நெருங்கிய உறவினர்கள் என்பதால் பேச்சுவார்த்தை வெற்றி பெறும்” என்று கூறப்படுகிறது.
“மத்திய இணை அமைச்சராக நாராயணசாமி இருந்தபோது, எந்த பிரச்சினை குறித்து கேட்டாலும், 15 நாட்களில் தீர்ந்துவிடும் என்றோ, 15 நாட்களில் சொல்கிறேன் என்றோ பதில் அளிப்பார். இப்போது அவரது முதல்வர் பதவியும் 15 நாட்கள் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது” என்று புதுவை அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.