புதுச்சேரிக்கு எதிராக செயல்படும் துணைநிலை ஆளுநரை எதிர்த்து மீண்டும் போராட்டம் நடத்த உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுவை முன்னாள் முதலமைச்சர் வெங்கடசுப்பா ரெட்டியார் நினைவு நாள் நிகழ்ச்சி காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்தது. அப்போது பேசிய நாராயணசாமி, “நாம் கவர்னருக்கு எதிராக தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்தவேண்டிய நிலையில் உள்ளோம். நியமன எம்.எல்.ஏ வழக்கில் கவர்னர் வெற்றி பெற்றார். அதேநேரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரமா ? நியமிக்கப்பட்டவருக்கு அதிகாரமா ? என்பதில் சென்னை உயர்நீதிமன்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் என தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கவர்னர் கிரண்பேடி டெல்லியில் 10 நாள் தங்கி மேல்முறையீடு செய்து இருக்கிறார். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு இருந்தாலும் இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால் கோடை கால நீதிமன்றத்தில் அவசர வழக்காக மீண்டும் வழக்கை தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், மீண்டும் இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.

அதேநேரத்தில் 2 உத்தரவுகளை பிறப்பித்து உள்ளனர். வருகிற 7ம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில், நிதி, நிலம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்றும், அப்படி முடிவெடுத்தாலும் அதை 21ம் தேதிக்கு பிறகு தான் அமல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு யார் மீதும் போடக் கூடாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். அமைச்சரவை தலைவர் என்ற முறையில் என்னை மனுதாரராக சேர்க்கும்படி கூறியுள்ளனர்.

கவர்னர் நமக்கு தொல்லை கொடுப்பதை நிறுத்தவில்லை. மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது. இருப்பினும் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கித்தரும்படி கேட்டுள்ளேன். ஓரிருநாளில் பிரதமரை சந்திப்பேன். நிதி, உள்துறை மந்திரியையும் சந்திக்க உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.