டெல்லி: நாரதா நியூஸ் வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி விலகுவதாக அறிவித்து உள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின்போது, `நாரதா நியூஸ்’ எனும் இணையதள ஊடகத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் உள்ளிட்டோர் போலி நிறுவன அதிகாரிகளிடமிருந்து லஞ்சம் பெறுவதைப் போன்ற வீடியோக்கள் வெளியாகின. `நாரதா ஸ்டிங் ஆபரேஷன்’ எனும் பெயரில் தெஹல்கா ஊடகத்தின் மூத்த பத்திரிகையாளர் மேத்திவ் சாமுவேல் நடத்திய இந்த அண்டர்கவர் ஆபரேஷனில், தன்னை ஒரு தொழிலதிபர் என்றும், தன்னுடைய இம்பெக்ஸ் கன்சல்டன்சி நிறுவனத்துக்கு ஆதரவாக சில வேலைகள் செய்து தருமாறும் கூறி திரிணாமுல் காங்கிரஸின் எம்.பி., எம்.எல்.ஏ-க்களுக்குப் பணம் கொடுத்து, அதைத் தங்களின் ரகசிய கேமராவில் பதிவுசெய்தனர்.
அந்த வீடியோக்களை naradanews.com என்ற பெயரில் இணையத்தில் வெளியிட்டு, 2016 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இருப்பினும், அந்தத் தேர்தலில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. இதையடுத்து, நாரதா நியூஸ் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. சிபிஐ விசாரணைக்கு ஆளுநர் அனுமதி அளித்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள் பிர்ஹத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி, எம்எல்ஏ மதன்மித்ரா, முன்னாள் அமைச்சர் சோவன் சாட்டர்ஜி ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
மாநில அமைச்சர்கள், எம்எல்ஏ கைது செய்யப்பட்டது, சட்டத்தை மீறிய செயல் என்று குற்றம் சாட்டிய முதல்வர் மம்தா பானர்ஜி, சட்ட அமைச்சர் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் சிபிஐ அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா செய்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதை எதிர்த்து, சிபிஐ தரப்பில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, ஜாமீனைத் திரும்பப் பெற்றனர். அதையடுத்து முதல்வர் மம்தா பானர்ஜி, தங்கள் மீது சிபிஐ அதிகாரிகள் சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை உடனடியாக விசாரிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதையடுத்து, மம்தா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டடது. இந்த மனுமீதான விசாரணை நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் அனிருத்தா போஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. எனினும் அந்த மனுவை விசாரிக்கும் பணியில் இருந்து நீதிபதி அனிருத்தா போஸ் தன்னைத்தானே விடுவித்துக் கொண்டார்.
ஏற்கனவே தான் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்ததால், தற்போது இந்த வழக்கை விசாரிப்பது சரியல்ல என்று கூறி உச்சநீதிமன்ற நீதிபதி அனிருத்தா போஸ் தன்னைத்தானே விடுவித்துக் கொண்டார்.