புதுடெல்லி:
தேர்தலையொட்டி தொடங்கப்பட்ட பாஜகவின் நமோ டிவி, தேர்தல் முடிந்ததும் காணாமல் போய்விட்டது.
கடந்த மார்ச் 26-ம் தேதி பாஜகவின் நமோ டிவி தொடங்கப்பட்டது. பிரதமர் மோடியின் பிரச்சாரத்தை இதில் தொடர்ந்து ஒளிபரப்பினர்.
டாடா ஸ்கை,வீடியோகான் மற்றும் டிஷ் டிடிஹெச்-களில் கட்டணமின்றி இந்த சேனல் ஒளிபரப்பப்பட்டது.
இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், இது குறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத்து துறை அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டது.
நமோ டிவி பதிவு செய்யப்படவில்லை என்றும், ஒளிபரப்ப அனுமதி பெறவேண்டும் என்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்தது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்திடம் அனுமதி சான்று பெறாமல், ஒளிபரப்பக் கூடாது என நமோ டிவை டெல்லி மாநில தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார்.
எனினும் மோடியின் கேதார்நாத் பயணம் வரை நமோ டிவில் ஒளிபரப்புவதாகவும், தேர்தல் ஆணையம் ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், தேர்தல் முடிந்ததும் நமோ டிவியில் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தேர்தல் நேரத்தில் டிவியை ஆரம்பித்து, வாக்குகளை பெறும் நோக்கில் செயல்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.