சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர் மாற்ற விவகாரத்தில், சென்னை என்ற பெயர் எடுக்கப்பட்டுள்ளதானது, பலரின் எதிர்ப்பையும் வருத்தத்தையும் சம்பாதித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை மாற்ற, சமீபத்தில் அரசு முடிவு செய்தது. புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். சென்ட்ரல் ரயில் நிலையம் என்பதுதான் புதிய பெயர்.
இதில் மிக முக்கிய அம்சமான ‘சென்னை’ என்பது இல்லை. இந்தப் புதிய பெயர் மாற்றம் ஏப்ரல் 5 முதல் அமலுக்கு வந்தது.
அரசின் இந்த ஏடாகூடமான முடிவால், புதிதாக தமிழகத்திற்கு வருகைதரும் பயணிகள் மிகுந்த குழப்பமடைவார்கள். இதனால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும் என்று கருதப்படுகிறது.
வரலாற்றுப் பிரியர்கள் மற்றும் பாரம்பரிய ஆர்வலர்கள் இதுதொடர்பாக கூறுவதாவது; ஒரு தனிநபரை விட, ஒரு நகரம் என்பது மிகவும் முக்கியமானது. அந்த மனிதர் எவ்வளவு பெரிய புகழ்பெற்ற மனிதராக இருந்தாலும்கூட, ஒரு வரலாற்று சிறப்புமிக்க ரயில் நிலையத்தின் பெயரை, தனிநபரின் பெயராக சுருக்குவது தவறு.
இந்த முடிவின் மூலம், 376 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஒரு நகரின் மாண்பு குறைக்கப்படுகிறது. இந்த ரயில் நிலையம் கடந்த 1873ம் ஆண்டு, ராயபுரம் ரயில் நிலையத்தின் நெரிசலைக் குறைப்பதற்காக உருவாக்கப்பட்டது.
பெங்களூரு நகரின் ரயில் நிலையம்கூட, கிராந்திவீரா சன்கொல்லி ராயனா ரயில் நிலையம் என்று பெயர் மாற்றப்பட்டது. ஆனால், தற்போது அது கே.எஸ்.ஆர். பெங்களூரு என அழைக்கப்படுவதை மறத்தல் ஆகாது.
எனவே, ஒரு நகரின் பெயர் என்பது காலத்தால் அழிக்கப்பட முடியாதது என்கின்றர்.
அதேசமயம், ரயில் பயணச் சீட்டுகள், MGR Chennai CTR என்று அச்சடிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
– மதுரை மாயாண்டி