சென்னை:
அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 24ந்தேதி திறக்கப்பட்ட ஜெ.வின் முழு உருவ சிலை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சிலையில் உள்ள முகம் ஜெயலலிதாவின் முகம் அல்ல என்று அதிமுக தொண்டர்கள் கூறி வரும் நிலையில், சிலைக்கு கீழே ஜெ.ஜெயலலிதா என போர்டு வையுங்கப்பா என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறி உள்ளார்.
கடந்த 24ந்தேதி ஜெ.வின் 70வது பிறந்தநாளையொட்டி, அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெ. முழுஉருவ வெண்கல சிலை திறந்து வைக்கப்பட்டது
இந்த சிலையை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சேர்ந்து திறந்து வைத்தனர். இந்த நிலையில், அதிமுக அலுவல கத்தில் திறந்து வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் சிலை, அவரைப்போலவே இல்லை என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்யப்பட்டு வருகின்றன. அதிமுக தொண்டர்களும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், ஜெ.வின் சிலையை வளர்மதி போன்றோருடன் ஒப்பிடுகிறார்கள். மனசாட்சி இல்லாத மிருகங்கள்தான் ஜெ.வின் புதிய சிலையை விமர்சிப்பார்கள் என்றும், ஜெயலலிதாவின் சிலையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும் கூறினார்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் சிலை குறித்து தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கமல் அரசியல் கட்சியை ஆரம்பித்து தெளிவாக பேசி யிருக்கிறார். ஆனால், மேடையில் கெஜ்ரிவாலை பேசவிட்டது தவறு என்றும், கெஜ்ரிவால் காங்கிரஸ் மற்றும் திராவிட இயக்கத்தைப் பற்றி தவறாக பேசியிருக்கிறார் என்றார்.
சென்னையில், ஜெயலலிதா அவர்களுடைய சிலையை திறந்திருக்கிறார்கள். அதற்குக்கீழே இவர்தான் ஜெயலலிதா என போர்டு வைக்க வேண்டும். அப்போதுதான் அது ஜெயலலிதா என தெரியவரும் என்று கூறினார்.
தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடி, காவிரி விவகாரம் குறித்து ஏதும் பேசவில்லை. அவர் இந்திய நாட்டின் பிரதமராக இருந்திருந்தால் தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்களை அறிவித்திருப்பார். ஆனால், அவர்தான் ஊர் சுற்றும் நாடோடியாக இருக்கிறாரே… அவரிடம் இருந்து உருப்படியான திட்டங்களைப் எதிர்பார்க்க முடியாது என்றார். தற்போது வழங்கப்பட்டு வரும் ஒவ்வொரு ஸ்கூட்டருக்கும் எவ்வளவு கமிஷன் வாங்கப்பட்டது என்பது விரைவிலேயே தெரிய வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.