டெக்சாஸ்: உங்கள் முன்னாள் காதலர் அல்லது காதலி ஞாபகம் இருப்பவர்களுக்கு அமெரிக்காவில் ஒரு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது அங்குள்ள விலங்கியல் பூங்கா.

உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாட்டங்கள் களை கட்ட தொடங்கி இருக்கின்றன. அதற்காக பல நாடுகளில் வித்தியாசமான போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் அன்டோனியா விலங்கியல் பூங்கா. உங்கள் முன்னாள் காதலன் அல்லது காதலி பெயரை ஏதேனும் ஒரு விலங்கினத்துக்கு வைத்துவிட்டு அதனை ஏதேனும் ஒரு விலங்குக்கு உணவாக அளிக்கலாம்.

இந்த கொண்டாட்டத்துக்கு க்ரை மீ ஏ காக்ரோச் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. அதற்காக அவர்கள் சில விதிகளை வைத்துள்ளனர். கரப்பான் பூச்சிக்கு உங்கள் காதலன் அல்லது காதலி பெயரை சூட்டி அதனை உணவாக அளிக்கலாம். அதற்கு கட்டணம் 5 டாலர்களாகும்.

அதுவே.. உங்கள் முன்னாள் காதலர் ரொம்பவும் தைரியசாலி என்றால் எலியை பாம்புக்கு உணவாக அளிக்கலாம். அதற்கு கட்டணம் 20 டாலர்களாகும். சமூக வலைதளங்களில் அதை வைரலாக்கினால் உங்களுக்கு ஒரு சான்றிதழ் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பேஸ்புக் மூலம் நேரிடையாகவும் ஒளிப்பரப்பவும் விலங்கியல் பூங்கா திட்டமிட்டு இருக்கிறது. அதற்காக இணையத்தின் வழியே விண்ணப்பிக்க வேண்டும். வரும் 13ம் தேதி கடைசி நாளாகும். இந்த வித்தியாசமான அறிவிப்புக்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.