நாமக்கல்: எருமப்பட்டி அருகே உள்ள அரசு பள்ளியின் சமையலறை மீது  மனித மலம் வீசப்பட்ட விவகாத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் அருகே உள்ள எருமப்பட்டி பேரூராட்சியில் உள்ள துவக்கப் பள்ளி சமையல் கூட கதவில் கடந்த 2ம் தேதி  மனித கழிவவு பூசப்பட்டிருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான தமிழ்நாடு அரசுமீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் மலம் வீசியராக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் சத்துணவு சமையல்காரர் மீதான முன்விரோதம் காரணமாக மலத்தை பூசியதாக தெரிவித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்,.

முன்னதாக,  நாமக்கல் எருமப்பட்டி பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சமூக விரோதிகள் அத்துமீறி மிக மோசமான செயல்களில் ஈடுபடுவதாக நாமக்கல் மாவட்டம் ஆட்சித் தலைவர் உமாவுக்கு இணைய வழியாகச் சமீபத்தில் புகார் கடிதம் ஒன்று வந்தது.  அதில்,  அங்குத் துவக்கப் பள்ளியில் உள்ள காலை உணவுத் திட்டச் சமையலறையிலும் மற்றும் ஆசிரியர்கள் அறை முன்பும் சில சமூக விரோதிகள் தொடர்ந்து பல விதமான அருவருப்பான கெட்ட வார்த்தைகளை எழுதிவிடுவதாகக் கூறப்பட்டு இருந்தது. மேலும், பாலியல் உணர்வைத் தூண்டும் வகையிலான படங்களை வரைவதாகவும் கூறப்பட்டு இருந்தது.

இதை எல்லாம் விடக் காலை உணவுத் திட்டச் சமையலறை கதவுகளிலும் மனித மலத்தை அப்பி விட்டு பூட்டை திறக்கவே முடியாத அளவுக்கு மனித மலங்களைப் பூசிவிடுவதாகவும் கூறப்பட்ட இருந்தது.

இந்தச் சம்பவம் பல நாட்களாக அங்கே தொடர்கதையாக இருக்கும் போதிலும், இதைத் தடுக்க பள்ளி ஆசிரியர்கள் எந்த விதத்திலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்தே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த விஷயத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைபெறும் இந்த சட்ட விரோதமான செயல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதுடன்,  இந்த விகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.

இதையடுத்து பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தினர். இதற்கிடையே நாமக்கல் எருமப்பட்டி முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தயாரிக்கும் அங்கன்வாடியில் மனிதக்கழிவு வீசப்பட்ட விவகாரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதான துரைமுருகன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மது அருந்திவிட்டு ஆபாச வார்த்தைகள் மற்றும் படங்களைப் பள்ளி சுவரில் எழுதியதாகவும் மனிதக்கழிவை வீசியதாகவும் துரைமுருகன் மீது குற்றஞ் சாட்டப்படுகிறது.

போலீசார் துரைமுருகனைக் கைது செய்து விசாரித்ததில் அவர் எதற்காக இதுபோல செய்தார் என்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது சத்துணவு மைய சமையலர், உதவியாளருடன் துரைமுருகனுக்கு முன்விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாகவே சத்துணவு மைய கதவில் மனித கழிவைப் பூசியதாக துரைமுருகன் வாக்குமூலம் அளித்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் எருமப்பட்டி அரசு பள்ளி சமையலறை கதவில் மனித கழிவு வீச்சு! மத்தியஅமைச்சர் கண்டனம்..