நாமக்கல்

நாமக்கல் மக்களவை தொகுதி திமுக கூட்டணியின் கொங்கு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சின்ராஜ் சாலை விபத்தில் காயமடைந்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள 38 மக்களவை தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வேலூர் தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதால் அந்த தொகுதிக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவில்லை. திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்கு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் சின்ராஜ் நாமக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.

வேட்பாளர் சின்ராஜ் இன்று திருச்செங்கோடு சென்று விட்டு காரில் நாமக்கல் திரும்பிக் கொண்டிருந்தார். அந்த காரில் அவருடன் அவருடைய மனைவியும் பயணம் செய்துக் கொண்டிருந்தார். கார் நல்லிப்பாளையம் என்னும் இடத்தில் உள்ள பாலத்தில் சென்றுக் கொண்டிருந்தது.

அப்போது கார் நிலை தடுமாறியதால் பாலத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. இதில் சின்ராஜ் மற்றும் அவர் மனைவி இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.