நாமக்கல்
வரும் நவம்பர் 1 ஆம் தேதி அன்று நாமக்கல் ஆஞ்சனேயர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.
நாமக்கல்லில் நகரின் மையப்பகுதியில் 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் ஆஞ்சனேயர் அருள் பாலித்து வருகிறார். இந்த கோவில் இங்குள்ள நரசிம்மர் கோவிலின் உபகோவில் ஆகும். உலகப் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு நாடெங்கும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமியைத் தரிசனம் செய்கின்றனர்.
நரசிம்மர் கோவில் மத்திய தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள குடவறைக் கோவில் என்பதால் இங்குக் குடமுழுக்கு நடக்க வாய்ப்பில்லை. எனவே அவ்வப்போது ஆஞ்சனேயர் கோவிலில் இந்த பணிகள் நடைபெறுகின்றன. இங்கு கடந்த 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு குடமுழுக்கு நடைபெறவில்லை.
எனவே கடந்த 5 மாதங்களாகக் குடமுழுக்கு குறித்த பணிகள் இங்குத் தனியார் பங்களிப்பு மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்ட ரூ.35 லட்சத்தில் நடைபெறுகிறது. இங்கு கோபுரம் கிடையது என்பதால் சுவாமிக்குபாலலாயம் செய்யப்படாமல் திருப்பணிகள் நடைபெறுகிறது. இதில் விநாயகர் கோவில் புனரமைப்பு, வெளிப்புறம் மற்றும் உட்புற வண்ணப்பூச்சுகள் உள்ளிட்ட பணிகள் அடங்கும்.
விரைவில் ஆஞ்சனேயர் சன்னிதியில் உள்ள கலசங்களைப் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற உள்ளன. இந்த ஆஞ்சனேயர் கோவில் குடமுழுக்கு குறித்து கோவில் மண்டபத்தில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு வரும் நவம்பர் 1 ஆம் தேதி அதாவது ஐப்பசி மாதம் 15ஆம் தேதி குடமுழுக்கு நடத்தவும் அதற்குள் பணிகளை முடிக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.