சென்னை:

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகள் 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்க உத்தரவிடக்கோரி நளினி தொடர்ந்த வழக்கு, விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறிய சென்னை உயர்நீதி மன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்யலாம் என உச்சநீதி மன்றம் கூறியுள்ள நிலையில், அதுகுறித்து ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது. இதை யடுத்து தமிழக அரசு ஆளுநருக்கு 7 பேர்  விடுதலை தொடர்பா பரிந்துரை அனுப்பியது.

ஆனால், ஆளுநர் முடிவு அறிவிக்காமல் காலதாமதம் படுத்தி வருவதை எதிர்த்து, குற்றவாளி களில் ஒருவரான நளினி, ஆளுநர் முடிவெடுக்க உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீது ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, ஆஜரான நளினி தரப்பு ஆளுனருக்கு சட்டப் பாதுகாப்பு இருந்தாலும் அமைச்சரவை பரிந்துரை மீது எந்த முடிவும் எடுக்காமல் இருக்க முடியாது என்றும், அமைச்சரவை பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்காததால் ஏழு பேரும் பேரும் சட்டவிரோத காவலில் இருப்பதாகவே கருதப்படும் என்றும் நளினி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர்,  விசாரணையின் போது ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், அவருக்கு சட்டப் பாதுகாப்பு உள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆளுநர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,  7 பேர் விடுதலை விவகாரம் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளதாகவும், அவருக்கு சட்டப்பாதுகாப்பு இருப்பதாகவும் கூறியதுடன்,  வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என தள்ளுபடி செய்யவும் கோரியது.

விவாதங்களை தொடர்ந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில், நளினியின் மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று கூறி தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் அறிவித்து உள்ளனர்.