சென்னை:
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து, தமிழக துணைசபாநாயகர் மீது நக்கீரன் பத்திரிகை குற்றம் சாட்டியதால், அதுகுறித்து பொள்ளாச்சி ஜெயராமன் நக்கீரன் கோபால் மீது புகார் கொடுத்திருந்தார்.
இந்த வழக்கில், முன்ஜாமின் கோரி நக்கீரன் கோபால் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கின் விசாரணையின்போது, பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுவதால் நக்கீரன் கோபால் தற்போது முன்ஜாமீன் பெற அவசியமில்லை என்று கூறி நக்கீரன் கோபால் தாக்கல் செய்த மனு முடித்து வைக்கப்பட்டது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் அவதூறு பரப்பியதாக நக்கீரன் கோபால் மீது பொள்ளாச்சி ஜெயராமன் சிபிசிஐடி காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். அதைத் தொடர்ந்து, விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நக்கீரன் கோபாலுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியது.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நக்கீரன் கோபால் மீது பொய்யான புகார் அளிக்கப் பட்டுள்ளதாகவும், அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் நக்கீரன் தரப்பில் கூறப்பட்டது.
அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு, சி.பி.ஐ.க்கு மாற்ற உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து, பொள்ளாச்சி வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுவதால் நக்கீரன் கோபால் தற்போது முன்ஜாமீன் பெற அவசியமில்லை என்றும், அதனால் நக்கிரன் ஆசிரியர் கோபால் தாக்கல் செய்த மனு முடித்து வைக்கப்படுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.