டெல்லி: விவசாயிகள் டெல்லிக்குள் புகுவதை தடுக்க டெல்லி காசியாபாத் எல்லையில், காவல்துறையினர் ஆணிகள், இரும்பு தகடுகள், பாறாங்கற்கள் போன்றவற்றைக்கொண்டு தடுப்பு ஏற்படுத்தினர். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், சாலையில் பதிக்கப்பட்ட ஆணிகளை பிடுங்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து இன்று 71வது நாளாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து வருகிறதுரு. விவசாயகிளின் ஜனவரி 26ந்தேதி டிராக்டர் பேணி வன்முறையானதைத் தொடர்ந்து, விவசாயிகள் டெல்லிக்குள் புகுவதை தடுக்க காவல்துறை கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. டெல்லி எல்லைகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அக்ஷர்தம் பகுதியை ஒட்டிய சாலைகளை டெல்லி போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஆகையால் டெல்லி – காசியாபாத் இடையே தேசிய நெடுஞ்சாலை 24ல் வாகனப் போக்குவரத்து தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
விவசாயிகள் தொடர்ந்து முன்னேறுவதைத் தடுக்கும் வகையில் முட்கம்பியுடன் கூடிய இந்த தடுப்பு வேலி, மஞ்சள் நிற பேரிகேடுகள் 4 அடுக்குகள், ஆணிகள், போலீஸ், அதிரடிப் படையினர் என டெல்லி – மீரட் சாலை, டெல்லி காசியாபாத் சாலை, சிங்குர் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்பட அரசியல் கட்சியினர் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து டெல்லி காசியாபாத் எல்லை சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஆணிகளை பிடுங்கி எடுக்கும் பணி தொடங்கி உள்ளது. தொழிலாளர்கள், சாலையில் பதிக்கப்பட்ட ஆணிகளை பிடுங்கி வருகின்றனர்.