அகர்தலா:
‘‘எனது அரசின் செயல்பாட்டில் யார் தலையிட்டாலும் விரல் நகத்தை இழுத்துவைத்து வெட்டுவேன்’’என்று திரிபுரா முதல்வர் பிப்லாப் தேவ் கூறியுள்ளார்.
உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட டயானா ஹெய்டனுக்கு அந்த தகுதி இல்லை. சிவில் இன்ஜினியர்கள் தான் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும். அரசு வேலைக்கு பதில் இளைஞர்கள் பீடா கடை வைக்க வேண்டும் போன்ற சர்ச்சை கருத்துக்களை திரிபுரா முதல்வர் பிப்லாப் தேவ் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று தனியார் செய்தி சேனலுக்கு பிப்லாப் தேவ் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,‘‘ காலை 8 மணிக்கு ஒரு காய்கறி கடைக்காரர் சுரைக்காய் வாங்கி வருகிறார். அந்த காய்களை வாங்க வந்தவர்கள் அங்கிருந்த சுரைக்காயை அழுத்தி அழுத்தி பார்த்துவிட்டு வாங்காமல் சென்றதால் அந்த காய் 9 மணி அளவில் அழுகிவிட்டது.
இதேபோல் எனது அரசில் நடக்கக் கூடாது. என் அரசில் யார் தலையீடும் இருக்க கூடாது. என் அரசின் செயல்பாடுகளில் யாரேனும் தலையிட்டாலோ அல்லது விமர்சனம் செய்தாலோ அவர்களின் விரலை இழுத்து வைத்து நகத்தை வெட்டிவிடுவேன்’’ என்று தெரிவித்தார். இந்த மிரட்டல் பேச்சு பலரையும் பெரும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.