நெட்டிசன்:

– ஆர் நூருல்லா செய்தியாளர்

முதல் இரவு பற்றி நாகேஷ். விழுந்து விழுந்து சிரித்த எம்ஜிஆர்….

மிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக நீண்ட நெடுங்காலம் ரசிப்பு ராஜாங்கம் நடத்தி வந்தவர் நடிகர் நாகேஷ்.
ஜனவரி 31ஆம் தேதி நாகேஷின் மறைவு தினம். அவரின் நினைவைப் போற்றுகின்ற வகையில் அவரது சுவாரஸ்யமான நிகழ்வு ஒன்றை இங்கே பதிவிட விரும்புகிறேன்.

தி. நகர், பாண்டி பஜாரில் அவர் ஒரு சினிமா தியேட்டரைக் கட்டினார். அதற்கு ஆசை ஆசையாக ‘நாகேஷ் தியேட்டர்’ என்றும் பெயர் வைத்தார். அதற்கான திறப்பு விழாவுக்குத் தடபுடல் ஏற்பாடுகளைக் கூட செய்து முடித்து விட்டார். ஆனாலும் அந்தோ…!

தமிழக அரசின் அனுமதி கிடைப்பதில் இழுபறி நீடித்தது. பள்ளிக்கூடத்திற்கு அருகிலேயே இந்த தியேட்டர் இருப்பதால் இதற்கு அனுமதி கொடுப்பதில் சட்டச்சிக்கல் இருப்பதாகக் கூறி, அதிகாரிகள் இழுத்தடித்துக் கொண்டே இருந்தனர். முட்டி முயன்று பார்த்தும்…நடைபெற்றது என்னவோ தடைபெற்றதுதான். கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தார்.

அப்போது முதலமைச்சராக இருந்த எம்ஜிஆரைப் போய்ப் பார்த்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்ததால் நாகேஷை எம்ஜிஆர் உற்சாகத்தோடு வரவேற்று, திரை உலக அனுபவங்கள் பற்றி ஆர்வத்தோடு உரையாடினார். “எதற்கு வந்தீர்கள்? என்ன வேண்டும்? “என்று எம்ஜிஆர் கேட்டார்.

நடிகர் நாகேஷ் வினோத விளக்கத்தை விவரித்தார். அது இதோ:

“கல்யாணம் பண்ணிட அனுமதி தந்தீர்கள். தாலி கட்டியாகிவிட்டது. சாந்திமுகூர்த்தத்திற்கு மட்டும் ஏன் தடை? ” சினிமா உலகில் கதைசொல்லிகளுக்கான ஒன்லைன் ஸ்டோரி போல அந்த வாசகம் அமைந்திருந்தது. அதைக் கேட்டு முதலில் வாய்விட்டுச் சிரித்த எம்ஜிஆர், “என்ன விவரம்? “என்று விளக்கிடக் கேட்டார்.

“தி. நகர், பாண்டி பஜாரில் நாகேஷ் தியேட்டர் கட்டி இருக்கிறேன். இதற்கு எல்லா அனுமதியும் கொடுத்து விட்டீர்கள். பிறகு தான் கட்டி முடித்தேன். அதற்குத் திறப்பு விழா நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. தியேட்டரில் திரையிடல் அதனால் தான் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.” -இப்படியாகத்தான் தனது கோரிக்கை பற்றி நாகேஷ் நாசுக்காக நாவாடினார்.

“சினிமா பாணியிலேயே சிக்கலைச் சொல்லி விட்டீர்களே!”என்று நாகேஷை பாராட்டினார் எம் ஜி ஆர். அதன் பிறகு சொல்லவா வேண்டும்! அதிரடி ஆணைகள் பறந்தன. நாகேஷ் தியேட்டருகான அனுமதி கிடைத்தது. நாகேஷ் காலத்தின்போதே தியேட்டரைச் சரிவர நடத்த முடியாமல் நிர்வாகச் சிக்கல்கள் ஏற்பட்டு, தியேட்டரை மூட வேண்டிய சூழ்நிலை உருவானது. இப்போது ஒரு கல்யாண மண்டபமாகி, விஜயா மஹால் என்ற பெயரில் புழங்குகிறது.

– ஆர் நூருல்லா செய்தியாளன்
12-01-2023 9655578786