நாகர்கோவில்:
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காங்கிரஸ் பெண் நிர்வாகி பெட்ரோல் பங்க் முன்பு தனி ஆளாக போராட்டம் செய்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்நது வருகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100 கடந்துவிட்டது. நாகர்கோவிலில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101 ரூபாய் 39 காசு ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை 94 ரூபாய் 88 காசு ஆகவும் விற்பனை ஆகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை திரும்ப பெற கேட்டும் பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் நாகர்கோவில், சுங்கான்கடை பகுதியை சேர்ந்த காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை தலைவர் சாகினா நாகர்கோவில் – களியக்காவிளை சாலையோரத்தில் கள்ளியங்காடு பகுதியில் பெட்ரோல் பங்க் முன்பு அமர்ந்து காலி கேன் மற்றும் தட்டு, மண் பாத்திரம் ஆகியவற்றை ஏந்தியவாறும், ஒரு கையில் காங்கிரஸ் கொடியே ஏந்திய வண்ணமும் தனி ஆளாக அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கடந்த ஒரு வாரம் முன்னதாக நடைபெற்ற இந்த போராட்டத்தில் ‘அய்யா சாமி பெட்ரோல் போட துட்டு இல்ல.. யாராவது பிச்ச போடுங்கம்மா.. ’ என்று கேட்டு அவர் பிச்சை எடுக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவை மலையாள நடிகர் சூரஜ் வெஞ்ஞாறமூடு பெட்ரோல் டீசல் விலை உயர்வு போராட்ட படக்காட்சி ஒன்றில் பேசிய மலையாள வசனங்களை இணைத்தும் சமூகவலைதளவாசிகள் வைரலாக்கியுள்ளனர்.
இதனிடையே நெட்டிசன்கள் ஒரு படி மேலே சென்று காங்கிரஸ் ஆட்சியின் போது பெட்ரோல் லிட்டருக்கு 7 காசு விலை உயர்த்தியதை கண்டித்து பா.ஜ.கவினர் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று போராடிய வீடியோவை தேடி பிடித்து சமூக வலை தளங்களில் பரப்பி பா.ஜ.கவை கலாய்த்து வருகின்றனர்.