சென்னை:
தமிழகத்தில் சுகாதாரத்துறை உள்ளிட்ட 3 துறைகளில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் சுகாதாரத்துறை திட்ட இயக்குனராக இருந்த நாகராஜன் ஐஏஎஸ் இடமாற்றம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சுகாதாரத்துறை திட்ட இயக்குனராக உள்ள நாகராஜன் ஐ.ஏ.எஸ் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சித்துறை இயக்குனராகவும், அவரது இடத்தில், சர்க்கரைத் துறை கூடுதல் இயக்குனர் அஜய் யாதவ் நியமிக்கப்பட்டு உள்ளார். இது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
நேர்மையான அதிகாரியான நாகராஜன் ஐஏஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது, தமிழக சுகாதாரத்துறையில் நடைபெற்று வந்த ஊழல், மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் நிகழ்ந்த முறைகேடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்ககாததால், அவர் இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே தமிழக மருத்துவத்துறைக்கு கொரோனா சோதனை கருவிகளான ரேபிட் கிட் கருவி, அதிக விலைக்கு வாங்கியதாக குற்றம் எழுந்தது. அதுபோல பிசிஆர் கருவிகள் உள்பட மருத்துவ உபகரணங்கள் வாங்குவதிலும் பல்வேறுமுறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரங்களில், தமிழக சுகாதாரத்துறையின் திட்ட இயக்குநர் நாகராஜன் ஐ.ஏ.எஸ்-க்கும் அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளதாகவும் கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாகராஜன் ஐஏஎஸ் கடந்த 2019ஆம் ஆண்டு மதுரையில் ஒரே இரவில் 1500 அங்கன்வாடி பணியாளர்களுக்கு பணி ஆணை வழங்கியதால் பணியிடை மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.