நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு செல்லும் சர்வதேச கப்பல் போக்குவரத்து ஆகஸ்ட் 16ம் தேதி துவங்கியது.

சிவகங்கை என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பலை இந்த்ஸ்ரீ ஃபெர்ரி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தினசரி இயக்குகிறது.

நாற்பது ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்ட இந்த கப்பல் போக்குவரத்து கடந்த 2023 அக்டோபர் மாதம் மீண்டும் துவக்கப்பட்டது. ஆனால் துவங்கிய சில நாட்களில் அது நின்று போனது.

இதனையடுத்து ஆகஸ்ட் 16ம் தேதி இந்தியா – இலங்கை இடையிலான கப்பல் போக்குவரத்து மீண்டும் துவக்கப்பட்டது.

ஆனால், போதிய பயணிகள் இல்லாததால் தினசரிக்கு பதிலாக வாரம் மூன்று நாட்கள் மட்டும் இயக்க கப்பல் போக்குவரத்து நிறுவனம் தீர்மானித்துள்ளது.

150 பேர் பயணம் செய்யக்கூடிய இந்த கப்பலில் திங்களன்று குறைந்த அளவு பயணிகளே நாகப்பட்டினத்தில் இருந்து பயணிக்க முன்பதிவு செய்திருந்தனர்.

இதனால், அன்றைய சேவை நிறுத்தப்பட்டு நேற்று சேவை வழங்கப்பட்டது. இருந்தபோதும் தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு கப்பல் மூலமாக செல்ல பயணிகள் அதிகளவு ஆர்வம் காட்டாததை அடுத்து இதனை செப்டம்பர் 15 வரை வாரம் 3 நாட்கள் மட்டும் இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதற்குள்ளாக பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும் பட்சத்தில் இதனை தினசரி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.