நாகநாதசுவாமி திருக்கோயில், (கேது தலம்), கீழப்பெரும்பள்ளம், நாகப்பட்டினம் மாவட்டம்

தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெற, பாற்கடலை கடைந்தபோது வாசுகி என்ற நாகத்தைக் கயிறாகப் பயன்படுத்தினர். தொடர்ந்து பாற்கடலை கடைந்ததால் வாசுகி பலவீனமடைந்தது. ஒருகட்டத்தில் களைப்பால் விஷத்தை உமிழ்ந்தது. பயந்து போன தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். அவர் விஷத்தை விழுங்கி, தேவர்களைக் காப்பாற்றினார். தனது விஷத்தை, சிவன் விழுங்க வேண்டிய நிலை ஏற்பட்டதற்காக வாசுகி வருந்தியது. சிவஅபச்சாரம் செய்ததற்கு பிராயச்சித்தமாக தவமிருந்தது.

வாசுகிக்கு காட்சி தந்த சிவன், பாவ விமோசனம் கொடுத்ததோடு, அதன் தியாக உணர்வைப் பாராட்டினார். அப்போது வாசுகி, தனக்கு அருள் செய்த கோலத்தில், தனக்கு காட்சி கொடுத்த இடத்தில் எழுந்தருள வேண்டும் என்று வேண்டியது. அதன் வேண்டுதலை ஏற்ற சிவன், நாகத்தின் பெயரைத் தாங்கி, “நாகநாதர்” என்ற பெயருடன் இத்தலத்தில் அமர்ந்தார்.

இக்கோயிலில் கேது பகவானுக்கு இராகுகாலம் மற்றும் எமகண்டத்தில் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடக்கிறது.

அப்போது, 16 வகையான அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்தும், கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு கலந்த சாதத்தை நைவேத்யமாக படைத்தும், பலவண்ண ஆடை சாத்தியும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும் வழிபடுகிறார்கள். கொள்ளு சாத பிரசாதத்தை இங்கேயே விநியோகித்துவிட வேண்டும். வீட்டிற்கு எடுத்துச்செல்லக்கூடாது. இதை கோயிலிலேயே செய்து தருகிறார்கள்.

இதற்குத் தனி கட்டணம். சனி, திங்கள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் இவரை வழிபடுவது விசேஷம். அபிஷேகத்திற்கும், தனிப்பட்ட முறையில் ஹோமம் நடத்துவதற்கும் தனி கட்டணம். தொழில், வியாபாரம் சிறக்கவும், வழக்கு, தம்பதியர் பிரச்னை, விபத்து, மரணபயம், நரம்பு, வாயு தொடர்பான பிரச்னைகள் நீங்கவும் கேதுவிடம் வேண்டிக்கொள்ளலாம்.

பங்குனியில் வாசுகி உற்சவம் நடக்கிறது. விழாவின் மூன்றாம் நாளில் கேதுவிற்கு, சிவன் காட்சி தந்த நிகழ்ச்சி நடக்கும். வருடத்தில், இவ்விழாவின்போதும், கேது பெயர்ச்சியின்போது மட்டுமே, கேது வீதியுலா செல்வார்.

இராகு கேது பெயர்ச்சியன்று விசேஷ ஹோமம் நடக்கிறது. அர்ச்சகர்களே இதை நடத்த உள்ளனர். இதில் பங்கேற்க கட்டணம் கிடையாது. கேதுவிற்கு உரிய எண் 7. எனவே, 16 வித பூஜை செய்து, 7 லட்சம் ஜபமந்திரம் சொல்லி, பின்பு கொள்ளு தானியம், கொள்ளினால் செய்யப்பட்ட பாயசம், சூர்ணம், வடை, சாதம், பொங்கல் மற்றும் கொள் உருண்டை என 7 விதமான நைவேத்யங்களை ஹோமத்தில் இடுகின்றனர். பக்தர்கள் 16 விதமான தானங்களை அந்தணர்களுக்கு செய்வதன் மூலம் பலனடையலாம். அன்று 7 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானமும் நடக்கிறது. இதற்குரிய பொருட்களையும் பக்தர்கள் கோயில் நிர்வாகத்திடம் முன்னதாகவே கொடுக்கலாம்.

கேது இங்கு பிரதான மூர்த்தி என்பதால் நவக்கிரக சன்னதி இல்லை. கேது சன்னதிக்கு அருகில் இரண்டு சூரியன் சிலைகளும், சனீஸ்வரர் சிலையும் உள்ளன. உத்ராயண புண்ணிய காலத்தில் (தை– ஆனி) ஒரு சூரியனுக்கும், தெட்சிணாயண புண்ணிய காலத்தில் (ஆடி– மார்கழி) மற்றொரு சூரியனுக்கும் விசேஷ பூஜை நடக்கிறது. இத்தலவிநாயகர் அனுக்கிரக விநாயகர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.

இக்கோயிலில் கேதுபகவான் தனிசன்னதியில் மேற்கு நோக்கி இருக்கிறார். பாம்புத் தலையுடனும், மனித உடலுடனும் உள்ள இவர், சிம்ம பீடத்தில் இரு கை கூப்பி சிவசன்னதியை நோக்கி வணங்கிய கோலத்தில் இருக்கிறார். ஞானகாரகனான இவர் இங்கு அனுக்கிரக மூர்த்தியாக காட்சி தருகிறார்.

இவரைக் கண்டு பயப்படத் தேவையில்லை. தன்னால் பாதிக்கப்படும் ராசியினருக்கு இவர் நன்மையே செய்வார். படிப்பில் முன்னேற, குடும்பவிருத்தி பெற இவரிடம் வேண்டிக் கொள்ளலாம். ஜாதக ரீதியாக நாகதோஷம் உள்ளவர்கள் முதலில் நாகநாதரையும், பின் கேதுவையும் வழிபட வேண்டும். கேதுவிற்குரிய செவ்வரளி மலர் வைத்து, கொள்ளு சாத நைவேத்யம் படைத்து, ஏழு தீபம் ஏற்றி வணங்குவது விசேஷம்.

திருவிழா:

சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், பங்குனியில் வாசுகி உற்சவம்.

பிரார்த்தனை

நரம்பு, வாயு தொடர்பான பிரச்சனை மற்றும் பயம் நீங்க, தொழில், வியாபாரம் சிறக்க, தம்பதியர் ஒற்றுமையுடன் இருக்க, ஆயுள் அதிகரிக்க, குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்க, தலைமுறை சிறக்க நாகநாதரையும், கேதுபகவானையும் வழிபடலாம். ஜாதகத்தில் கேது தசாபுத்தி நடப்பவர்கள், ஜென்மநட்சத்திரத்தில் பாலபிஷேகம் செய்து வழிபடலாம்.

நேர்த்திக்கடன்:

கேது பகவானுக்கு கொள்ளு சாத நைவேத்யம் படைத்து, பலவர்ண ஆடை சாத்தி வழிபடுகிறார்கள்.

இருப்பிடம் :

மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில் இருந்து 22 கி.மீ., தூரத்தில் இக்கோயில் உள்ளது. கேது பெயர்ச்சியை ஒட்டி போக்குவரத்து வசதி செய்து தரப்படுகிறது. சாதாரண நாட்களில், பஸ் வசதி அதிகமில்லை. மயிலாடுதுறையில் இருந்து காரில் சென்று வரலாம்