பெங்களூரு:

கர்நாடகாவில் லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் வழங்கப்பட்டதும் வீரசைவ–லிங்காயத் சமூகம் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் குறிப்பாக வட கர்நாடகத்தில் வீரசைவ–லிங்காயத் சமூக மக்கள்  பெரும்மான்மையாக வசிக்கிறார்கள். வீரசைவ–லிங்காயத் சமூகம் ஒன்று கிடையாது என்றும், லிங்காயத் மற்றும் வீரசைவ சமூகம் தனித்தனியானது என்றும் அம்மாநில அமைச்சர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு லிங்காயத் சமூகத்தை சேர்ந்த மடாதிபதிகளில் ஒரு பிரிவினர் ஆதரவு தெரிவித்தனர்.

அதே நேரத்தில் வீரசைவ–லிங்காயத் சமூகத்தினர் ஒன்றே தான், இரு சமூகமும் வெவ்வேறானது கிடையாது என்றும் வீரசைவ சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் மற்றும் மடாதிபதிகள் வலியுறுத்தினர்.

மேலும் லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் அளிக்க வலியுறுத்தி அந்த சமூகத்தை சேர்ந்த மடாதிபதிகள் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் மாநாடுகளை நடத்தி தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.

லிங்காயத் மக்களின் கோரிக்கை குறித்து பரிசீலிக்க ஓய்வுபெற்ற நீதிபதி நாகமோகன்தாஸ் தலைமையில் தலைமையில் குழு அமைக்கப்பட்டு் ஆய்வு செய்யப்பட்டது. அந்த குழு லிங்காயத் சமூகத்தை தனிமதமாக அங்கீகரிக்கலாம் என்று பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரைகளுக்கு  கர்நாடக அமைச்சரவையில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.

லிங்காயத்துக்கள் தனி மதத்தினர் என்று மாநில அரசு அங்கீகரித்ததோடு,  இதற்கான அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

கர்நாடக மந்திரிசபையின் இந்த முடிவை லிங்காயத் மற்றும் வீரசைவ சமூகத்தை சேர்ந்த மந்திரிகள் வரவேற்றனர். இந்த முடிவை கேட்டு வட கர்நாடகத்தில் உள்ள லிங்காயத் சமூகத்தினர் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கலபுராகியில் வீரசைவ–லிங்காயத் சமூகம் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

அதாவது லிங்காயத் – வீரசைவர்கள் இரண்டும் ஒரே பிரிவு என்றும்.. தனித்தனி பிரிவு என்றும் மோதல் வெடித்துள்ளது.

சிம்புதேவன் இயக்கிய 23ம் புலிகேசி திரைப்படத்தில், “நாகபதனி – நாகப்பதனி” என இரு சாதியினர் மோதிக்கொள்வது போல் காட்சி ஒன்று இருக்கும். தற்போதைய லிங்காயத் வீரசைவ மோதல் அக்காட்சியை நினைவுபடுத்துகிறது.