கொஹிமா:
நாகலாந்து மாநிலத்தில் ஆளும் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக சட்டமன்ற உறுப்பினர்கள் சொகுசு விடுதியில் சிறை வைக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில், அதிமுக எம்எல்ஏக்கள் 12 நாட்களாக சொகுசு விடுதியில் சிறை வைக்கப்பட்டிருந்தது போலவே, தற்போது நாகலாந்திலும் நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில், நாகாலாந்து மக்கள் முன்னணி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக டி.ஆர்.ஜெலியாங் உள்ளார். அவரது தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்தது.
ஆனால், அங்கு நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில், பெண்களுக்கு, 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்து ஜெலியாங் உத்தரவிட்டார். அவரது உத்தரவுக்கு அங்குள்ள பழங்குடியினர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
இதன் காரணமாக ஏற்பட்ட உள்கட்சி நெருக்கடியால் ஜெலியாங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதைத்தொடர்ந்து புதிய முதல்வரை கட்சி முடிவு செய்தது. முதர்வர் போட்டிக்கு அங்கு கடும் போட்டி உருவானது. முதல்வராக நாகாலாந்து மக்கள் முன்னணி தலைவர், ஷுர்ஹோசிலி லேஜேட்சும், முன்னாள் முதல்வரும், தற்போதைய எம்.பி.,யுமான நீபியூ ரியோவும் களத்தில் குதித்தனர்.
இவர்களில், நாகாலாந்து மக்கள் முன்னணி தலைவர் ஷுர்ஹோசிலி லேஜேட்சு முதல்வராக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து ஆளும்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையியும், அசாமில் காஜிரங்கா பகுதியில்வி உள்ல்ள ஒரு சொகுசு விடுதியில் சிறை வைக்கப்பட்டனர்.
60 இடங்களை கொண்ட நாகலாந்து சட்டசபையில், நாகலாந்து மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்த 48 பேர் எம்எல்ஏக்களாக உள்ளனர். பாரதியஜனதா 4 உறுப்பினர்களும், சுயேச்சை உறுப்பினர்கள் 8 பேரும் உள்ளனர்.
இதற்கிடையில் கட்சி தலைவரான ஷுர்ஹோசிலி லேஜேட்சு விரைவில் நாகலாந்து முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
இந்த நேரத்தில் கட்சிக்குள் யாரும் குழப்பம் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவே எம்எல்ஏக்கள் அனைவரையும் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பதவி ஏற்க உள்ள புதிய முதல்வர் மாநில கவர்னரை சந்தித்து பதவி ஏற்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். அதைத்தொடர்ந்து நாளை முதல்வராக ஷுர்ஹோசிலி லேஜேட்சு பதவி ஏற்க உள்ளார்.
அவருக்கு முன்னாள் முதல்வர் ஜெலியாங் வாழ்த்து தெரிவித்தார்.
புதிய முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஷுர்ஹோசிலி லேஜேட்சு எட்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். ஆனால், அவர் கடந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.