டில்லி:

மேகாலயா மற்றும் நாகலாந்து சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது.

மேகாலயா மாநிலத்தில் உள்ள 60 சட்டமன்ற தொகுதிகளில் இன்று 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.  இந்த தேர்தலில் 32 பெண்கள் உட்பட மொத்தம் 369 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இங்கு 9 லட்சத்து 29 ஆயிரத்து 333 பெண்கள் உட்பட 18 லட்சத்து 44 ஆயிரத்து 785 வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கிறார்கள்.  இவர்களில் 89 ஆயிரத்து 45 பேர் முதன்முறை வாக்களிக்க இருக்கிறார்கள்.

தற்போது இங்கு காங்கிரஸ் ஆட்சி நடந்துவருகிறது. முதல்வராக  முகுல் சங்மா பதவி வகித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பேரணியாக சென்று தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.

பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் ‘ தீவிரமாக தேர்தல் பிரசாரம் செய்தனர்.

மேலும், தேசிய மக்கள் கட்சி, ஐக்கிய ஜனநாயக கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் கணிசமான இடங்களை கைப்பற்ற தீவிர பிரசாரம் செய்தன.

இதேபோல, நாகலாந்து மாநிலத்தில் உள்ள 59 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. 13-வது சட்டசபையை அமைக்க நாகலாந்து மக்கள் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க. ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி, லோக் ஜனசக்தி, தேசிய மக்கள் கட்சி ஆகியவை தீவிரமாக பிரச்சாரம் செய்தன.

இரு மாநிலங்களிலும் காலையில் தொடங்கி மாலை வரை வாக்குப்பதிவு நடைபெறும். சட்டசபை தேர்தலை முன்னிட்டு பலத்த பாதுகாபபு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இரு மாநிலங்களிலும் இன்று பதிவாகும் வாக்குகள் மார்ச் 3-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.