புதுடெல்லி: டாங்கர் எதிர்ப்பு ஏவுகணைகளான நாக்(NAG) ஏவுகணை சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டிஆர்டிஓ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிகரமான சோதனைகளை அடுத்து, இந்த ஏவுகணைகள் விரைவில் இந்திய ராணுவத்தில் இணைக்கப்படவுள்ளன என்றும் கூறப்படுகிறது.

ரூ.524 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த நாக் ஏவுகணை அமைப்பை ராணுவத்தில் சேர்ப்பதற்கு, கடந்த ஆண்டே த டிஃபென்ஸ் அக்யூசிஷன் கவுன்சில் ஒப்புதல் அளித்தது. இதை ராணுவத்தில் சேர்ப்பதன் மூலம், இந்திய ராணுவத்தின் டாங்கி எதிர்ப்புத் திறன் மேலும் வலுவடையும் என்று நம்பப்படுகிறது.

ராஜஸ்தான் பாலைவனத்தில் இந்த ஏவுகணைகள், பகல் மற்றும் இரவு வேளைகளில் சோதித்துப் பார்க்கப்பட்டன. ஏவுகணைகள் தங்களின் இலக்கை மிகத் துல்லியமாக தாக்கின. தற்போது, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவை முடிவடைந்தவுடன் ராணுவத்தில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.