சென்னை: நடிகர் சங்க பொதுக்குழு வரும் செப்டம்பர் மாதம் 8ந்தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.   நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமையில் தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு வரும் செப்டம்பர் மாதம் 8ந்தேதி கூடுவதாக அறிவிங்ககப்பட்டு உள்ளது.     இந்தக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் கருணாஸ், பூச்சி முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

சமீப காலமாகத் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் நடிகர் சங்கத்துக்கும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. நடிகர் விஷால், தனுஷ் உட்பட சில நடிகர்களின் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தங்களைக் கலந்தாலோசிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் நிறைவேற்றிய தீர்மானத்துக்கு நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது.

தமிழ் சினிமாவில் நடிக்கும் நடிகர்களின் சம்பளம் மற்றும் படப்பிடிப்புக்கான தேதி ஒதுக்கீட்டில் (கால்ஷீட் ) நடைபெறும் குளறுபடி காரணமாக தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.இதனால் நவம்பர் 1 ஆம் தேதியில் இருந்து திரைப்பட தயாரிப்பு வேலைகள் எதுவும் நடத்தக்கூடாது என்று புதிதாக அமைக்கப்பட்டுள்ள திரைப்பட சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஜூலை 29 ஆம் தேதி அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்தது.

இதற்கு அன்று இரவே தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவித்து மறுப்பு அறிக்கையொன்றை வெளியிட்டு சங்கத்தின் பெருளாளர் நடிகர் கார்த்தி செய்தியாளர்களிடம் பேசியிருந்தார். இந்த நிலையில் நேற்று கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அதில் ஜூலை 29 அன்று தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், “நடிகர் தனுஷ் மீது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் எந்த வித புகாரும் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்கள்

அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. ஏனெனில் கடந்த  ஓராண்டுக்கு முன்பு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுவில் தயாரிப்பாளர்களுக்கு பிரச்சனை மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுத்தும் முக்கிய 5-நடிகர்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த தகவல் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் தெரியப்படுத்திய தகவல் அப்பொழுது அனைத்து ஊடகங்களிலும் வெளியானது.

மேலும், கடந்த ஓராண்டு காலமாக தென்னிந்திய நடிகர் சங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது அவர்களுக்கு மேற்படி விஷயம் தொடர்ந்து சுட்டிக்காட்டப்பட்டு வந்தது. ஆனால், தென்னிந்திய நடிகர் சங்கம் இந்த பிரச்சனை சம்பந்தமாக தயாரிப்பாளர்களுக்கு எந்தவிதமான தீர்வும் ஏற்படுத்தி தரவில்லை.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களின் நலனை காக்கவே இந்த முடிவை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், தயாரிப்பாளர்களுக்கு உள்ள பிரச்சனைகளை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விவாதித்து தீர்வு காண்பது சங்கத்தின் கடமையாகும். அதே போல் நவம்பர் 1 முதல் படப்பிடிப்புகள் முழுமையாக நிறுத்தி திருத்தி அமைக்கப்பட்ட விதிமுறைகளுடன் (New Guideline) படப்பிடிப்பு பணிகளை தொடர தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அடங்கிய கூட்டமைப்பு (Joint Action Committee) எடுத்துள்ள முடிவிற்கு தாங்கள் கண்டனம் தெரிவித்துள்ளீர்கள்.

இன்றைய சூழ்நிலையில் பணத்தை முதலீடு செய்யும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள், தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர்கள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோரை பெரும் பொருளாதார இழப்பிலிருந்து பாதுகாத்து திரைத்துறையையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு உள்ளது. ஆகையால்தான் கூட்டமைப்பு கூட்டத்தினை கூட்டி இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பெற்றுக்கொண்டு, அந்த வரிசைப்படித்தான் நடித்துக் கொடுத்து வருவது என்பது காலங்காலமாக இருந்து வரும் மரபு. அவ்வாறு இல்லாமல் புதிதாக திரைப்படம் எடுக்க வருபவர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு, ஏற்கனவே பணம் கொடுத்தவர்களுக்கு நடித்து கொடுக்காமல் மற்றவர்களுக்கு நடித்து கொடுப்பது எந்தவிதத்தில் நியாயமாகும்? இப்படி இக்கட்டான சூழ்நிலை இருக்கும் பட்சத்தில் கூட்டமைப்பின் மூலம் அறிவிக்கப்பட்ட அறிக்கை தவறானது கண்டனத்திற்குரியது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் கூறியிருப்பதை வாபஸ் பெற வேண்டும்.

மேலும்,  தயாரிப்பாளர்கள், நடிகர்கள் இனி ஒப்பந்தம் செய்துகொண்டுதான் படம் நடிக்க வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளீர்கள். எங்களது தயாரிப்பாளர்கள் தரப்பிலும் கால்ஷீட் நாட்களை குறிப்பிட்டு ஒப்பந்தம் செய்து கொடுங்கள் என்று கேட்கின்றோம். ஆனால், நடிகர்கள் அதனை பொருட்படுத்தவில்லை என்பதை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களை எப்படி நீங்கள் பாதுக்காக்கிறார்களோ அதே போல் எங்களது சங்க உறுப்பினர்களை பாதுகாக்க வேண்டிய கடமை எங்களுக்கும் உள்ளது. நடிகர்கள் சம்பளம் மற்றும் படப்பிடிப்பு செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகின்ற காரணத்தினால், மேலும் மேலும் நஷ்டத்தினை எதிர்கொள்ள தயாரிப்பாளர்களால் இயலவில்லை. மேலும், கடந்த 6-மாத காலத்தில் தயாரிப்பாளர்கள், தங்களது திரைப்படங்களை வியாபாரம் செய்ய இயலாமல் தொலைக்காட்சி, ஓடிடி என அனைத்து வியாபார தளங்களிலும் பொருளாதார ரீதியாக மிகவும் இக்கட்டான சூழல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

மேலும்,  நவ.1-ம் தேதி முதல், சினிமா தொடர்பான அனைத்துப் பணிகளும் நடைபெறாது என்ற தயாரிப்பாளர் சங்க முடிவுக்கு கண்டனத்தைத் தெரிவித்தது.

இந்த பிரச்சினை மேலும் பெரதிான நிலையல், கடந்த  சில  தினங்களுக்கு முன் நடந்த நடிகர் சங்க செயற் குழுவில், தயாரிப்பாளர் சங்கத்துடன் பிரச்சினைகளைப் பேசி தீர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் நாசர் தெரிவித்தார்.

இதையடுத்து,  நடிகர் சங்கத்தின் 68-வது பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 8-ம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. இதில், சினிமா பணிகளை நிறுத்துவது குறித்த தயாரிப்பாளர் சங்க முடிவு, நடிகர் சங்கக் கட்டிட விவகாரம், நட்சத்திர கலைவிழா நடத்தி நிதிதிரட்டுதல் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.ஒவ்வொரு பொதுக்குழுவிலும் மூத்த கலைஞர்களை கவுரவிப்பது வழக்கம். இப்போது நடிகர் டெல்லி கணேஷை கவுரவிக்க இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.