நெட்டிசன்:

ஆசிப் நியாஜ் அவர்களது முகநூல் பதிவு:

முதலில் மையம் என்பதை மய்யம் என எழுதுவது சரியே ! தமிழ் மொழியின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் அதை உறுதி செய்கிறது.

ஐ > அய் என எழுத விதி சொன்னது தொல்காப்பியமே ! பெரியார் தன் எழுத்துச் சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக ஐ > அய் என எழுதலாம் என்றார்.

அகரத் திம்பர் யகரப் புள்ளியும்
ஐஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும். (தொல். எழுத்து.மொழி மரபு 23)

இது குறுக்கத்திற்கு மட்டுமே ! ஐ என்னும் ஒலிப்பு குறுகி ஒலிக்கும் போது ஐ என்னும் எழுத்து அதற்குரிய 2 மாத்திரையிலிருந்து 1.5 மாத்திரையாக குறைந்து ஒலிக்கும்.

இதைப் போலவே ஒள என்பதும் குறுகி ஒலிக்கும் போது அவ் என 1.5 மாத்திரையாய் ஒலிக்கும் (ஒளகார குறுக்கம்).

இதன் படி:

ஐவனம் = அய்வனம்
ஐயா = அய்யா
ஐயர் = அய்யர்
மையம்=மய்யம்
ஒளவை=அவ்வை

கவிஞர் எப்பவும் இப்பிடித்தான்.. பெரியார்தான் சொன்னார்.. அதுனால தவறுன்னு தட்டையான புரிதலோடு சொல்லிட்டு கை என்பதை கய் எனவா எழுதுகிறோம்னு அறிவுப் பூர்வமா ஒரு கேள்வி கேக்குறார்.

பாவாணர் இதைத் தெளிவாக விளக்குகிறார். “ஐகார ஒளகாரங்கள் தமித்து நில்லாது சொல்லுறுப்பாக வரும்போது, முறையே அய் அவ் என்றொலித்துத் தனித்தனி ஒன்றரை மாத்திரை கொள்ளும்.”(இலக்கண கட்டுரைகள் – 16. ‘ஐ ஒள’ ‘அய் அவ்’ தானா?)

குறுகி ஒலிக்கும் இடங்களில் மட்டுமே ஐ>அய் ஆகும்.. அதற்கு குறுகி ஒலிக்க வேண்டும்.. தை, கை, போன்றவற்றில் ஐ என்பது முடிப்பொலி. அதில் குறுகி ஒலிப்பதில்லை.. வாய் விட்டு சொல்லிப் பார்த்தா தெரியும்..

அதே போலவே நேர்மை, உண்மை, அம்மை, etc.. அங்க நேர்மஅய் என எழுதக் கூடாது.. அதே விதிதான் கை என்பதற்கும் கய் என எழுதக் கூடாது..

மையம் என்பதை மய்யம் என எழுதலாம்.. எழுதலாம்.. எழுதலாம்…