“தலைமை ஆணையிட்டால் நான் மட்டும் அல்லது அனைத்து எம்.பி.க்களும் ராஜினாமா செய்யத் தயார்” என்றும், “அப்படி ராஜினாமா செய்வதால் காவிரி மேலாண்மை வாரியம் அமையுமா” என்றும் அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன் கேள்வி எழுப்பியுள்ளார்
காவிரி விவகாரம் குறித்து சந்திக்க பிரதமர் மறுத்தால், அதிமுக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள் என அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று நேற்றுமுன் தினம் நடந்த ஆலோசனையின்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளரிடம் அ.தி.மு.க. எம்.பி.க்களில் ஒருவரான மைத்ரேயன் பேசினார். அப்போது அவர், “அதிமுக தலைமை ஆணையிட்டால் தான் மட்டும் அல்லது அனைத்து எம்.பி க்களும் ராஜினாமா செய்யத் தயார்” என்றார்.
மேலும், “அப்படி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதால் காவிரி மேலாண்மை வாரியம் அமையுமா” என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையே அமைச்சர் ஜெயக்குமார், “ காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் அங்கம் வகித்தபோது, தமிழகத்தின் நலனிற்காக திமுக என்ன அழுத்தம் கொடுத்தது” என கேள்வி எழுப்பியுள்ளார்.