சேலம்,
ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற ‘தங்கமகன்’ மாரியப்பன் மீது, இளைஞர் மர்ம மரணம் குறித்து புகார் செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் , ஒமலூர் அருகே உள்ள பெரியவடகம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன், கடந்த ஆண்டு ரியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வென்றார். அவருக்கு தமிழக அரசு, மத்தியஅரசு மற்றும் தனியார் நிறு வனங்களும் பரிசுகளை அள்ளிக்குவித்தன.
இதற்கிடையில் மாரியப்பன் ரூ.27 லட்சத்தில் புதிய கார் ஒன்றை வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த காரின்மீது, அந்த பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் தனது பைக்கை கொண்டு இடித்து விட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து மாரியப்பன் தனது நண்பர்களுடன், சதீஸ்குமார் வீட்டுக்கு சென்று, காரில் ஏற்பட்ட சேதத்திற்கு ஆன செலவை கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்துக்கு பின்னர் சதீஷ்குமாரை காணவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பெரியவடகம்பட்டி அருகே உள்ள ரயில் நிலைய தண்டவாளத்தில் சதீஷ்குமார் சடலமாக கிடந்தார்.
அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக இறந்த சதீஷ்குமாரின் தந்தை மூர்த்தி,’தங்கமகன்’ மாரியப்பன், அவரது தாய் சரோஜா, மாரியப்பனின் நண்பர்கள் ஆகியோர் மீது தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை மாரியப்பன் மறுத்து கூறியிருப்பதாவது,
மதுபோதையில் இருந்த சதீஸ்குமார் தனது புதிய காரில் மோதிவிட்டு, நிற்காமல் சென்று விட்டதாகவும், இதுகுறித்து கேட்கவே அவரது வீட்டிற்கு சென்றதாகவும், தனது காரில் ஏற்பட்ட சேதத்திற்கான செலவை ஏற்பதாக சதீஷ்குமாரின் தாயார் கூறிய நிலையில், வேண்டாம் என கூறிவிட்டு திரும்பி வந்துவிட்டோம் என்று கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.