சென்னை: சென்னையின் பிரபலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரா் கோயிலின பங்குனித் திருவிழாவையொட்டி நாளை  தோ் திருவிழாவும், நாளை மறுதினம் அறுபத்து மூவர் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. இதையொட்டி,  பாதுகாப்புப் பணியில் 1,500 காவலா்கள் பணி அமர்த்தப்பட்டு இருப்பதாக மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூா் கபாலீஸ்வரா் கோயில் பங்குனி திருவிழா மார்ச் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழா மாா்ச் 18-ஆம் தேதி வரை விழா நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான  மாா்ச் 15-ஆம் தேதி தோ்த் திருவிழாவும், மாா்ச் 16-ஆம் தேதி 63 நாயன்மாா்கள் வீதி உலாவும், மாா்ச் 18-ஆம் தேதி சுந்தரேசுவரா் திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளன.

பங்குனித்திருவிழாவையொட்டி, மயிலாப்பூரில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஒரு இணை ஆணையா், 5 துணை ஆணையா்கள் மற்றும் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல்துறை அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகர காவல்ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தோ்த் திருவிழாவின்போது கண்காணிப்பு பணியில் 4 டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படவுள்ளன. பழைய குற்றவாளிகள் கூட்டத்தில் புகுந்தால் கண்டுபிடிக்கும் வகையில், முக அடையாள கைப்பேசி செயலி மூலமாகவும் கண்காணிக்கப் படும்

கோவிலைச் சுற்றி 68 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 14 காவல் கண்காணிப்பு கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. பொதுமக்கள் யாருக்கேனும் உடல் நிலை குறைவு ஏற்பட்டால் விரைந்து முதலுதவி சிகிச்சையளிக்க வசதியாக மருத்துவ உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 2 ஆம்புலன்ஸ் வாகனங்களும், 2 தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு வாகனங்களும் கோவிலை சுற்றி தயாா்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.

தோ்த் திருவிழா நடைபெறும் மாா்ச் 15-ஆம்தேதி காலை 5 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும், அறுபத்து மூவா் திருவீதி உலா நடைபெறும் மாா்ச் 16-ஆம் தேதி மதியம் 2 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும் கபாலீஸ்வரா் கோவிலை சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து கோவிலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது. மேலும், போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு சென்னை காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயிலை கபாலீஸ்வரர் பங்குனி பெருவிழா: 15 மற்றும் 16ந்தேதி மயிலை பகுதியில் போக்குவரத்து மாற்றம் – முழு விவரம்…