வாஷிங்டன்

கொரோனா சிகிச்சைக்காக அமெரிக்க அதிபர் ஊசி மூலம் கிருமி நாசினி செலுத்தச் சொன்னது கிண்டலுக்காக என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த வியாழன் அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க அறிவியல் நிபுணரும் அமைச்சருமான பில் பிராயன் சூரிய வெளிச்சம்  மட்டும் ஐசோபுரொவில் என்னும் கிருமி நாசினி ஆகியவற்றால் கொரோனா கொல்லப்படும் எனத் தெரிவித்தார்.  இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கிருமி நாசினிகளை ஊசி மூலம் கொரோனா நோயாளிகள் உடலுக்குள் செலுத்தி கொரோனா வைரசைக் கொல்லலாம் எனத் தெரிவித்தார்.

இந்த கருத்து  மருத்துவ நிபுணர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. கிருமி நாசினிகளை உடலுக்குள் ஊசி மூலம் செலுத்தினால் மரணம் ஏற்பட வாய்ப்பு உண்டு எனவும் டிரம்ப் மக்களுக்குத் தவறான வழிகாட்டுதலை அளித்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.   மக்களில் பலரும் டிரம்பின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம், ”நான் கிருமி நாசினியை ஊசி மூலம் செலுத்தி கொரோனாவை கொல்லலாம் எனத் தெரிவித்தது வெறும் கிண்டலுக்காக மட்டுமே ஆகும்.   செய்தியாளர் ஒருவர இது குறித்துக் கிண்டலாக கேள்வி எழுப்பினார்.  நானும் அவருக்குக் கிண்டலாக பதில் அளித்தேன்” என விளக்கம் அளித்துள்ளார்.