பெங்களூரு

பாஜகவில் சேர்ந்ததன் மூலம் தனது மகனே தனது பெயரை கெடுத்து விட்டதாக முன்னாள் பிரதமர் தேவே கௌடா கூறி உள்ளார்.

முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவருமான தேவே கௌடா தற்போது கர்நாடக தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.   ஆளும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜக ஆகிய இரு கட்சிகளையும் எதிர்த்து தேவே கௌடா தேர்தல் களத்தில் இறங்கி உள்ளார்.   அவர் சமீபத்தில் செய்தியாளர் ஒருவருக்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில் தேவே கௌடா, “நான் எனது சொந்தமான அமைச்சரவையை யார் உதவியும் இன்றி அமைக்க போராடி வருகிறேன்.    கர்நாடகாவில் காங்கிரஸ் பலம் இழந்து வருகிறது.   முதல்வர் சித்தராமையா தோல்விக்கு பயந்து சாமுண்டீஸ்வரி தொகுதியில் இருந்து பதாமிக்கு மாறி உள்ளார்.  பாஜகவும் பலவீனமாக உள்ளது.  எடியூரப்பாவின் மகனுக்கு தேர்தல் வாய்ப்பு தரக்கூடாது என அனந்தகுமார் ஹெக்டே உள் வேலை செய்துள்ளார்.  அந்தக் கட்சியில் கடும் கோஷ்டி மோதல் இருப்பதை இது காட்டுகிறது.

எனக்கு காங்கிரஸ் – பாஜக இரு கட்சிகளுமே எதிரிகள் தான்.  என்னிடம் இருந்து சித்தராமையா மற்றும் பிரகாஷை காங்கிரஸ் இழுத்தது ஏன்?  நான் பலம் பொருந்தியவனாக இருப்பதினால் ஏற்பட்ட பயம் தான் காரணம்.   என்னை பலவீனப்படுத்திய காங்கிரசுக்கு எதிராக செல்வதாகக் கூறி என் மகன் குமாரசாமி பாஜகவில் இணைந்தார்.  அதனால் என் பெயுர் மிகவும் கெட்டுவிட்டது.  இவர்களின் ஒரே எண்ணம் என்னையும் எனது மதச்சார்பற்ற கட்சியையும் வீழ்த்துவது மட்டுமே.

காங்கிரஸ் கட்சி முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் ஆட்சியை கவிழ்த்த போதே அது மதச்சார்பற்ற கட்சி இல்லை என்பது நிரூபிக்கப் பட்டுவிட்டது.    நான் பிரதமராக இருந்த போது 1996ல் குஜராத் பாஜக அரசை நீக்கினேன்.  ஆனால் அவர்கள் திமுக வுடன் கூட்டு வைத்துக் கொண்டனர்.    அதன் பிறகு காங்கிரஸ் ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட மாநிலத்தில் அப்போது ஆளூம் கட்சியாக இருந்த திமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டது.  காங்கிரஸ்,  பாஜக இரண்டுமே சந்தர்ப்பவாதக் கட்சிகள்.” என தெரிவித்துள்ளார்.