சென்னை:  தமிழ்நாடு அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற திருமண விழாவில் , தம்பதிகளுக்கு தாலி எடுத்து கொடுத்து திருமணம் நடத்தி வைத்த முதல்வர் ஸ்டாலின்,  பல ஆண்டுகால வன்மத்தால் என்னை விமர்சித்து கேலிச் சித்திரம் வெளியிடுகின்றனர், தன்மீது எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் மக்கள் பணி தொடரும். என்னுடைய பணி அறிந்து நான் செயல்படுவேன், `என் கடன் பணி செய்து கிடப்பதே’  என கூறினார்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 32 இணைகளுக்கு திருமணம் இன்று நடைபெற்றது.சென்னை ஆர் .ஏ.புரத்தில் உள்ள அருள்மிகு கபாலீசுவரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த  திருமணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்து சீர்வரிசை பொருட்களை வழங்கி மணமக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “திராவிட மாடல் ஆட்சியில் இந்துசமய அறநிலையத்துறை மகத்தான வளர்ச்சி அடைந்துள்ளது.  அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செயல்வீரராக திகழ்கிறார்.  அடியார்க்கு அடியார் போல் உழைத்து கொண்டிருக்கும் சேகர்பாபுவால் தான் பக்தர்கள் போற்றும் அரசாக தி.மு.க. ஆட்சி உள்ளது.

 முதலமைச்சராக நான் அதிக நிகழ்ச்சிகள் கலந்து கொண்டது இந்து சமய அறநிலையத்துறையில் தான். பக்தர்கள் போற்றக்கூடிய அரசாக தொடர்ந்து சாதனை படைத்து வருகிறோம். திராவிட மாடல் ஆட்சியில் 3177 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி வைத்துள்ளோம். 7,000க்கு மேற்பட்ட ஏக்கர் கோயில் நிலங்களை மீட்டுள்ளோம். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நிலங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது. 12,000 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆதி திராவிடர் வசிக்கின்ற பகுதியில் 5000 கோயில்களுக்கு நிதி உதவி செய்துள்ளோம். மூத்த குடிமக்களை கட்டணமில்லாமல் ஆன்மிக பயணத்துக்கு அழைத்துச் சென்றுள்ளோம். 29 பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கியுள்ளோம். 41 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணை வழங்கியுள்ளோம். அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள், பொங்கல் கருணை தொகை என ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

அறநிலையத்துறை சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 2,326 இணையர்களுக்கு திருமணம் நடத்திவைக்கப்பட்டுள்ளது. வெறுப்பையும் சமூகத்தில் பிளவுபடுத்தும் எண்ணங்களை கொண்டவர்களால் எங்களை பார்த்து தாங்கிக் கொள்ள முடியவில்லை. பக்தியின் பெயரால் பகல்வேஷம் போடுவர்களால் திமுக அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பல ஆண்டுகால வன்மத்தால் என்னை விமர்சித்து கேலிச் சித்திரம் வெளியிடுகின்றனர், என்னை, அமைச்சர்களை விமர்சித்து வெளியாகும் கார்டடூன்களால் எனக்கு சிரிப்பு வரவில்லை, பரிதாபமாக இருந்தது. பக்திதான் அவர்கள் நோக்கம் எனில் ஆன்மிகத்திற்கு  அரசு செய்த நன்மைகளை பட்டியலிட்டிருக்கலாம். எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் மக்கள் பணி தொடரும். என்னுடைய பணி மக்கள் பணி அதை அறிந்து நான் செயல்படுவேன். இன்னும் எங்களை கேலி செய்யுங்கள், விமர்சனம் செய்யுங்கள், கொச்சைப்படுத்துங்கள், அதை பற்றி கவலைப்பட போவதில்லை.   உண்மையான பக்தர்கள் திராவிட மாடல் அரசை பாராட்டுகின்றனர். எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும் மக்கள் பணி தொடரும். மணமக்கள் பிறக்க போகும் குழந்தைக்கு அழகான தமிழ் பெயர் வையுங்கள். .”

இவ்வாறு பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா சுப்பிரமணியன், கே.என் நேரு, மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் திருமணம் செய்து கொண்ட மணமக்களுக்கு அறநிலையத்துறை சார்பில் இலவசமாக சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.